உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

இலங்கை செய்திகள்

வடமாகாண அமைச்சர்கள் தொடர்பான இறுதி அறிக்கை முதலமைச்சரிடம்
வடமாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசாரணை குழுவின் இறுதி அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் 93ஆம் அமர்வு இன்றைய தினம் மாகாணசபையின் பேரவை செயலகத்தின் சபை மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்புகையில், வடமாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான விசாரணை குழு ஒன்றை முதலமைச்சர் உருவாக்கினார். அந்த குழுவின் இறுதி அறிக்கை வந்துவிட்டதா? என கேள்வி எழுப்பினார். குறித்த கேள்விக்கு பதலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் முதலமைச்சர் பதிலளிக்கையில், கடந்த 19 ஆம் திகதி இறுதி அறிக்கை கிடைத்தது. அடுத்த அமர்வில் மேற்படி இறுதி அறிக்கையை சபைக்கு சமர்பிப்பதா? இல்லையா? என்பதை அறிவிப்பேன். மேலும் விசாரணை குழுவின் இறுதி அறிக்கை தற்சமயம் ஆராயப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
See More
எளிய முறையில் கடமைகளை பொறுப்பேற்ற புதிய நிதி அமைச்சர்!
புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீர தனது அமைச்சு பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்தார். நிதியமைச்சுக்கு சென்ற மங்கள் சமரவீர, ஆடம்பரம் இன்றி எளிய முறையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வின் போது சிறப்பு விருந்தினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. எனினும் மங்கள சமரவீரவின் சகோதரி ஜயந்தி குணவர்தன மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் கலந்துக் கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் மங்கள் சமரவீர நிதி மற்றும் ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக மங்கள செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடமைகளை எளிய முறையில் பொறுப்பேற்று கொண்டுள்ளீர்களே என மங்களவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது,”இது பதவி மாற்றமே தவிர அரசாங்க மாற்றம் இல்லை” என மங்கள பதிலளித்துள்ளார்.
See More
நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்ட குறுக்கீடுகளுக்கு வடமாகாணசபை வருத்தம் தெரிவிப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சில குறுக்கீடுகள் ஏற்பட்டமைக்கு வடமாகாணசபை வருத்தத்தை தெரிவித்துள்ளது. வடமாகாணசபையின் 93ஆம் அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த வருத்தத்தை மாகணசபை சார்பில் சபைக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் பல இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அந்த மக்களுடைய நினைவேந்தல் நிகழ்வு வடமாகாணசபையின் ஒழுங்கமைப்பில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்த போது சில குறுக்கீடுகள் உருவானது. இந்த குறுக்கீடுகளுக்காக வடமாகாண சபை வருத்தம் தெரிவிக்கிறது என சீ.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
See More
வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றார் ரவி
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார். வெளிவிவகார அமைச்சில் வைத்தே, ரவி கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தேசிய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க, கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதேவேளை,புதிய நிதி அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
See More
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம்! எதிராக களமிறங்கும் இந்தியா, ஜப்பான்!
இந்தியாவும் ஜப்பானும் இணைந்து இலங்கையில் இயற்கை எரிவாயு இறக்குமதி முனையம் ஒன்றைநிர்மாணிக்கவுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கை குறைக்கும் வகையில் இந்தத் திட்டம்முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 250 மில்லியன் டொலர்கள் முதலீட்டுடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளை பிரதேசதில் உள்ள கெரவலபிட்டியவில் அமையவுள்ள இந்த முனையம், 2 மில்லியன் மெட்ரிக் தொன் இயற்கைஎரிவாயுவை சேமிக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்படிக்கை இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருப்பதாக, இந்தியாவின் பெற்றோநெட் நிறுவனத்தின் முகாமைப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றாளருமான பிரபாத் சிங் தெரிவித்துள்ளார்.
See More
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களிடம் ஜனாதிபதி கூறிய செய்தி!
நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்படுகின்றனவர்களுக்கு எதிராக கடுமையானசட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவில் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டுப்பிரதமர் மெல்கம் டேன்புல்லை இன்று சந்தித்துள்ளார். இதன்போது இருநாட்டு இராஜதந்திர உறவுகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் உள்ளிட்டபல்வேறு விடயங்கள் தொடர்பில் இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார். அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி,அண்மைக்காலமாக அரசியல் ரீதியாக லாபம் தேடும் சில குழுக்கள், இனவாத செயற்பாடுகளில்ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான குழுக்களுக்கு எதிராக சட்டத்தை உரிய வகையில் அமுலாக்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அமைதியை சீர்குலைக்க எவருக்கும்இடமளிக்கப் போவதில்லை என்றும் அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய இணைப்பு நாட்டில் அமைதியை சீர்குலைத்து சுதந்திரத்தை இல்லாமல் செய்யும் அடிப்படைவாதிகள் எத்தனை பேர் இருந்தாலும் கடந்த இரண்டு வருட காலத்தில் எந்த உலக நாடும் இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் அங்கு வாழும் இலங்கை மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இந்த நிகழ்வில் வர்த்தகர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். உலக நாடுகள் இலங்கைக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகின்றன. கடந்த இரண்டு வருட காலத்திற்குள் உலகில் உள்ள சகல நாடுகளையும் நண்பனாக்கி கொண்டது தற்போதைய அரசாங்கம் பெற்ற உண்மையான வெற்றியாகும். இதன் மூலம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திடம் இருந்து பாரிய சேவைகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. அதேவேளை நாட்டுக்குள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அடிப்படைவாத செயற்பாடுகள் அனைத்தும் தற்போதைய அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியல் சூழ்ச்சிகள். எனது அரசாங்கம் நாட்டிற்குள் ஏற்படுத்திய சுதந்திரமும் ஜனநாயகமுமே இந்த சூழ்ச்சிகளுக்கு காரணம். எந்த சூழச்சியாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள சகல வேலைத்திட்டங்களும் அப்படியே முன்னெடுத்துச் செல்லப்படும். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் ராஜதந்திர தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமரை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்க உள்ளேன் என்றார்.
See More
வெளிநாட்டில் இன்னல்களை எதிர்நோக்கிய இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்!
மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்த 52 இலங்கைப் பெண்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலையீட்டில் குறித்த இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 70 பேர் உள்ளடங்கிய இரண்டாவது பணிப் பெண்கள் குழுவினரும் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் இலங்கை பணிப்பெண்களை, நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
See More
சிங்கள இளைஞர்கள் ஆவேசம்! எது வேண்டுமானாலும் நடக்கலாம் என எச்சரிக்கை
சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஆவேசமாக இருக்கின்றனர். இனிமேல் என்ன நடக்கும் என்பது தெரியாது என பொதுபல சேனாவின் ஜபுரேவல சந்தரதன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் நேற்று இடம் பெற்ற ஊர்வலத்தின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், நாட்டில் பௌத்தம் அழிந்து கொண்டு வருவதாக ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனினும் அதற்காக கருத்து தெரிவிக்கும் எம்மை இனவாதிகளாக சித்தரித்து விட்டார்கள். மேலும், வடக்கில் விக்னேஸ்வரன் தனி ஈழத்தினை இலங்கை வரைபடத்தில் அமைத்துக் கொண்டு வெற்றியை கொண்டாடுகின்றார், விஜயகலா பிரிவினைவாதக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றார். சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்து கொண்டு வருகின்றார், அசாத்சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் உட்பட பலரும் இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு எதிராக நாட்டின் நீதி செயற்படவில்லை. ஆனால் ஞானசார தேரர் பௌத்தத்திற்காக கருத்து வெளியிடும் போது அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த சமயத்தில் நாம் ஒன்றைக் கூறிக்கொள்கின்றோம் இனி நாம் எதனையும் பேச மாட்டோம். ஆனால் நாம் நாட்டில் இனவாதம் பரப்பும் அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளோம். அவர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும். அவ்வாறு கைது செய்தால் ஞானசாரர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம். அதனைச் செய்யாது இதே வகையில் பிரச்சினை தொடருமானால் அதனால் விளைவுகள் பாதகமாக அமையும். சிங்கள இளைஞர்கள் மிகுந்த ஆவேசத்தில் உள்ளார்கள் அதன் காரணமாக அடுத்தது எது வேண்டுமானாலும் நடக்கலாம். என்ன நடக்கும் என்பது எமக்கு தெரியாது என பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கின்றோம் எனவும் சந்தரதன தேரர் தெரிவித்துள்ளார்.
See More
35 வயதுக்கு குறைந்தவர்கள் முச்சக்கர வண்டியை செலுத்த தடை!
அண்மைக்காலமாக இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான சட்டம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் 35 வயதிற்கு அதிகமானவர்களுக்கு மாத்திரமே இனி வரும் காலங்களில் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் முன்வைத்த யோசனைகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானத்திற்கு முன் வந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் முச்சக்கர வண்டிகளினால் ஏற்படுகின்ற விபத்துகளின் அதிகரிப்பு காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
See More
ஜனாதிபதி மைத்திரியால் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம்
பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவோரை தண்டிக்கும் வகையில் சட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை வழங்குவதற்கு அவசியமான சட்டத்திட்டங்களை வெகு விரைவில் கொண்டு வரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார். யார் எதிர்ப்பு வெளியிட்டாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய ஜனாதிபதி, இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் இந்த சட்டத்திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். வலைத்தளங்கள் ஊடாக சேறு பூசுதல், அவமதித்தல், போலி பிரச்சாரம் முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சில அரச ஊடகங்கள் தற்போது வரையில் வேறு நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுவதாகவும், அவற்றினை எதிர்வரும் காலங்களில் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
See More