உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

PREV

இலங்கை செய்தி விவரங்கள்

NEXT

கல்குடா மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து மூளைச் சலவை செய்கிறார்கள்

கல்குடா மக்களுக்கு பலர் இலஞ்சம் கொடுத்து அவர்களை மூளைச் சலவை செய்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகஸ்வரன் தெரிவித்தார். முறக்கொட்டான்சேனை இளஞ்சுடர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு கலை கலாச்சார விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், குறித்த மதுபான உற்பத்திச் தொழிற்சாலையை உடன் நிறுத்தக்கோரி கிழக்கு மாகாண சபையில் பிரேரணை கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் பிரதேச, மாவட்ட மட்ட அபிவிருத்திக்குழு அத்துடன் மாவட்ட அரசியல்வாதிகள், பிரதேச மக்களின் எதிர்ப்பு போன்றன நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் மதுபான தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகளை நிறுத்தக் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பும் மகஜரில் ஒரு சிலர் கையெழுத்து வைக்க மறுப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். வேலை பெற்றுத் தருவதாக சிலர் பொய் கூறிக் கொண்டு திரிகின்றார்கள். குறித்த மதுபானசாலையை கட்டி முடித்த பின்னர்தான் எமது சமூகம் பாதிக்கப்படயிருக்கின்றது. குறித்த விடயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில் இவ்வாறான மதுபான உற்பத்தி நிலையங்களினால் மேலும் பலர் சமூக சீர்கேடுகளுக்கு ஆளாகவுள்ளனர். மேலும் எமது தமிழ் மக்களை வறுமைக் கோட்டிற்குள் தள்ளும் செயற்பாட்டிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் பல வைத்தியர்களும் மூளைச் சலவை செய்து வருகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேசம் முதலாம் இடத்திலும், இரண்டாம் இடத்தில் கிரான் பிரதேசமும் (வறுமை வீதம் 19.1) வறுமைக் கோட்டின் கீழ் அதிக முக்கிய இடத்தில் உள்ளது. ஆசியாவில் பெரிய அரிசி ஆலையாக இருந்த முறக்கொட்டான்சேனை தேவபுரத்தில் இருக்கின்ற அரிசி ஆலை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது குறித்த அரிசி ஆலை முற்றுமுழுதாக அழிவடைந்து செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீள் நடவடிக்கைக்குரிய அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த அரிசி ஆலையை மீள செயற்படுத்துவதற்கு பல முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை தொடர்பாக பார்வையிட்டு ஆலோசனை மற்றும் முதலீட்டாளர்களின் திட்டத்தின் கீழ் அரிசி ஆலையை செயற்படுத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். மக்களின் அபிவிருத்தி சார்ந்த முதலீடுகளுக்கு எவ்விதமான தடைகளையும் ஏற்படுத்த மாட்டோம். கல்குடா கும்புறுமூலையில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதான மதுபான உற்பத்தி தொழிற்சாலை எமது மக்களுக்கு பாதகமான விடயத்தை கொண்டு வருகிறது. மக்களுக்கு பொருத்தமற்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை முற்றுமுழுதாக தென் பகுதியிலுள்ள பெரும்பான்மை பணம் படைத்தவர்களினால் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு தென் பகுதியில் இருந்து பல தொழிற்சாலைகளை அமைப்பதால் நீண்ட காலத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மை சமூகத்தின் இனப்பரம்பலை ஏற்படுத்தும் திட்டங்களையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். அதனால் தமிழ் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். அரசு பல விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கேட்டு செய்ய இருக்கின்றது. வந்திருக்கும் சந்தர்ப்பத்தை விட்டு வைக்க கூடாது. மக்களின் தேவைகள் அதிகமாக காணப்படுவதினால் தற்போது ஆட்சியிலுள்ள அரசை சரியாகப் பயன்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஞா.சிறீநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.