உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

திருச்சபை செய்திகள்

ஆந்திராவில் சேதமடைந்த ஆலயம், அமைதி செப வழிபாடு
திருத்தூதர்கள் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ளவாறு, அரசியல் மற்றும் மத நோக்கங்களுக்காக அன்று கிறிஸ்தவர்கள் வதைக்கப்பட்டதுபோலவே இன்றும் வதைக்கப்படுகின்றனர் என்று, இந்தியாவின் ஹைதராபாத் உயர் மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர் Bernard Swarna அவர்கள் கூறினார். ஹைதராபாத் உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த Godamakunta என்ற இடத்தில், பாத்திமா அன்னை ஆலயம் ஒன்று அடிப்படைவாத குழுவினரால் தாக்கப்பட்டது தொடர்பாக, ஆசிய செய்திக்குப் பேட்டியளித்த அருள்பணியாளர் Bernard Swarna அவர்கள், இவ்வாறு கூறினார். இத்தாக்குதலால், மக்கள் மனம் தளர்ந்து போயிருந்தாலும், இதற்குப் பரிகாரமாக, மே 28, வருகிற ஞாயிறன்று, அப்பகுதியில் ஒரு பல்சமய செப வழிபாடு நிகழும் என்றும், இவ்வழிபாட்டில் அமைதிக்காக அனைத்து மதத்தினரும் கூடிவந்து செபிப்பர் என்றும் அருள்பணி Swarna அவர்கள் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவர்கள் மட்டுமே இந்த வழிபாட்டு முயற்சியில் கலந்துகொள்ள முதலில் திட்டமிடப்பட்டது என்றும், ஏனைய, இந்துக்கள், இஸ்லாமியர் அனைவரும் இதில் கலந்துகொள்ளும் ஆர்வம் தெரிவித்ததால், இதனை பல்சமய வழிபாடாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
See More
குற்றங்களைத் தடுப்பதற்கு, சட்டங்கள் மட்டும் போதாது
குற்றங்களைத் தடுப்பதற்கு, வெறும் சட்டங்களைக் கொண்டு மட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது போதாது என்பதையும், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் முன்னேற்றுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் திருப்பீடம் முழுமையாக நம்புகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார். வியென்னா நகரில் நிகழும் ஐ.நா.அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும், அருள்பணி Janusz Urbancyzk அவர்கள், மே 22ம் தேதி முதல், 28ம் தேதி முடிய அங்கு நிகழும் பன்னாட்டு கூட்டம் ஒன்றில் இவ்வாறு உரையாற்றினார். "குற்றங்களைத் தடுப்பதற்கு முழுமையான, ஒருங்கிணைந்த திட்டங்கள்" என்ற தலைப்பில் நிகழும் இக்கருத்தரங்கை திருப்பீடம் மனதார வரவேற்கிறது என்பதையும், அருள்பணி Urbancyzk அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார். குற்றங்களைத் தடுக்கும் முயற்சிகள், மனித சமுதாயத்தின் அடிப்படையான குடும்பங்களில் துவங்கவேண்டும் என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய அருள்பணி Urbancyzk அவர்கள், குடும்பங்கள், பல்வேறு நெருக்கடிகளால் சூழப்படும் வேளையில், அங்கு, அமைதி குலைந்து, அதுவே பல்வேறு குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது என்று கூறினார். குடும்பத்திற்கு அடுத்ததாக பள்ளிகள், மத நிறுவனங்கள் ஆகியவை, இளையோரை நல்வழி நடத்துவதிலிருந்து தவறும்போது, குற்றங்கள் பெருக வாய்ப்புக்கள் உருவாகின்றன என்று, அருள்பணி Urbancyzk அவர்கள், கவலை வெளியிட்டார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
அர்ஜென்டீனா தேசிய நாளுக்கு திருத்தந்தையின் வாழ்த்து
மே 25, இவ்வியாழனன்று, அர்ஜென்டீனா நாடு, தன் தேசிய நாளைக் கொண்டாடுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு அரசுத்தலைவர், மவுரிசியோ மாக்ரி (Mauricio Macri) அவர்களுக்கு, வாழ்த்து தந்தியொன்றை அனுப்பியுள்ளார். தன் அன்பார்ந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும், உலக செல்வங்களையும், ஆன்மீக வளங்களையும், பெற்றுவாழ தான் வாழ்த்துவதாக, தன் தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை. மேலும், அமைதி, ஒருவர் மீது ஒருவர் காட்டும் மரியாதை, என்ற வழிகளில் நாடு முன்னேற்றம் காணவேண்டும் என்பதையும் தன் வாழ்த்தாகக் கூறியுள்ளார், திருத்தந்தை. இஸ்பானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற, 1810ம் ஆண்டு, மே மாதம் 25ம் தேதி, புவனஸ் அயிரஸ் நகரில் துவக்கப்பட்ட ஒரு புரட்சி, அந்நாட்டு விடுதலையில் நிறைவுற்றதால், மே 25ம் தேதி, அந்நாட்டில், புரட்சியின் நாளென்றும், தேசிய நாளென்றும் சிறப்பிக்கப்படுகிறது. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
இத்தாலிய ஆயர் பேரவையின் புதிய தலைவர் - கர்தினால் பஸ்ஸெத்தி
இத்தாலியின் பெரூஜியா (Perugia) பேராயரான, கர்தினால் குவால்தியேரோ பஸ்ஸெத்தி (Gualtiero Bassetti) அவர்களை, இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 24, இப்புதனன்று நியமித்தார். உலகின் ஏனைய நாடுகளில் இயங்கிவரும் ஆயர் பேரவைகளின் தலைவர்களை, அந்தந்த நாடுகளின் ஆயர்கள் தேர்ந்தெடுக்கும் வேளையில், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருக்கு தகுதியான மூவரை, இத்தாலிய ஆயர்கள் முன்மொழிய, அவர்களில் ஒருவரை திருத்தந்தை நியமிப்பது, இத்தாலியில் மட்டும் நிகழ்கிறது. வயது முதிர்ந்தோரின் கனவுகள் காணும் வல்லமை மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை, தன்னை இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவராக அவர் நியமித்துள்ளதில் தெரிகிறது என்று, இப்பேரவையின் புதியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கர்தினால் பஸ்ஸெத்தி அவர்கள் கூறினார். இவ்வாண்டு ஏப்ரல் 1ம் தேதி, தான் 75 வயதை நிறைவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் பஸ்ஸெத்தி அவர்கள், தனக்கு முன்னர் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்கோ அவர்களுக்கு சிறப்பாக நன்றி கூறினார். 1942ம் ஆண்டு பிறந்த குவால்தியேரோ அவர்கள், 1996ம் ஆண்டு அருள்பணியாளராகவும், 1994ம் ஆண்டு ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டார். 2014ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், கர்தினாலாக உயர்த்தப்பட்ட பஸ்ஸெத்தி அவர்கள், ஆயர்கள் பேராயம், அருள்பணியாளர்கள் பேராயம் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை ஆகிய மூன்று துறைகளில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
திருத்தந்தையுடன் அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், டொனால்டு டிரம்ப், அவரது மனைவி, மெலானியா டிரம்ப் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர், மே 24, இப்புதன் காலை 8.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினர். புதன் பொது மறைக்கல்வி உரையை வழங்கச் செல்வதற்கு முன்னதாக, அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களை திருத்தந்தை சந்தித்த வேளையில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்து, இச்சந்திப்பில் பேசப்பட்டதென வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்தது. திருத்தந்தையுடன் நிகழ்ந்த இச்சந்திப்பிற்குப்பின், அரசுத்தலைவர், டிரம்ப் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார். மேலும், திருப்பீடத்தில் நிகழ்ந்த சந்திப்புக்களுக்குப் பின்னர், அரசுத்தலைவரின் மனைவி, மெலானியா டிரம்ப் அவர்கள், உரோம் நகரின் குழந்தை இயேசு குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று, அங்குள்ளோரைச் சந்தித்தார் என்று வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்தது. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
மான்செஸ்டர் தாக்குதலுக்கு இந்தியத் திருஅவை கண்டனம்
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவிக்கும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர், இந்திய தலத்திருஅவை மற்றும் அரசு அதிகாரிகள். இத்தாக்குதல் குறித்து வருத்தத்தை வெளியிட்ட, மும்பை பேராயரும், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவருமான கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இளையோர், குழந்தைகள் என எண்ணற்றோரின் உயிர்களைப் பலிவாங்கியுள்ள இந்த தாக்குதல் குறித்து ஆசியத் திருஅவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்காகச் செபிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், குறைந்தது 22 பேரின் உயிரிழப்புக்கும், ஏறத்தாழ 59 பேர் படுகாயமடைதலுக்கும் காரணமான இந்த தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டுள்ள, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்த தாக்குதல் குறித்து, தன் வன்மையான கண்டனத்தை வெளியிடுவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தோருடன் ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இடம்பெற்ற இத்தாக்குதல் குறித்து சீன அரசுத்தலைவர் Xi Jinping, இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி உட்பட எண்ணற்ற உலகத் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். ஆதாரம் : Asia News/ வத்திக்கான் வானொலி
See More
புலம்பெயர்தல் கட்டாயமாக இடம்பெற வேண்டிய அவசியமில்லை
மக்கள் புலம்பெயர்தல், கட்டாயமாக இடம்பெற வேண்டிய நிலையாக இல்லாமல், ஒரு தெரிவுநிலையாக அமைய வேண்டும் என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் உரையாற்றினார். நீடித்த நிலையான வளர்ச்சி மற்றும், ஏழ்மை ஒழிப்பு குறித்த ஐ.நா. அமர்வில், புலம்பெயரும் மக்கள் பற்றிய விவாதத்தில் பகிர்ந்துகொண்ட, ஐ.நா.வுக்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார். மக்கள் புலம்பெயர்தலுக்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்று சொல்வதற்குமுன், அவர்கள், தங்கள் சொந்த நாடுகளிலேயே தங்கி, அமைதியிலும், பொருளாதாரப் பாதுகாப்பிலும் வாழ்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்பதை நாம் நினைவுகூர வேண்டும் எனவும் உரையாற்றினார், பேராயர் அவுசா. உலகளாவிய ஒப்பந்தங்கள் வழியாக, புலம்பெயர்தல் குறித்த ஒரு பாதுகாப்பான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டால், புலம்பெயர்தல் குறித்த பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும், பேராயர் அவுசா அவர்கள் ஐ.நா.வில் கூறினார். மேலும், புலம்பெயர்தல் பிரச்சனை, மனிதர்களால் உருவாக்கப்பட்ட விவகாரம் என்ற தலைப்பிலும், இத்திங்களன்று, மற்றோர் அமர்வில், ஐ.நா.வில் உரையாற்றினார் பேராயர் அவுசா. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
மனந்திறந்த உரையாடலில் ஈடுபட இத்தாலிய ஆயர்களுக்கு திருத்தந்தை
தூய ஆவியாரால் அசைக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்படவும், ஆறுதலளிக்கப்படவும், நம்மை அவரிடம் கையளிப்போம் என, இத்தாலிய ஆயர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்திங்களன்று, தங்களின் எழுபதாவது பொதுப் பேரவையை தொடங்கிய இத்தாலிய ஆயர்களை, அன்று மாலையில் வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய, உரோம் ஆயரான, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் வழங்கும் சக்தியின்றி, மனிதர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வீணானதாக ஆகிவிடும் எனக் கூறினார். உற்றுக்கேட்டல், படைப்பாற்றல்திறன், மனந்திறந்த பகிர்வு, முரண்பட்ட கருத்துக்களைத் தாழ்ச்சியுடன் எதிர்கொள்ளல் போன்றவற்றுக்கு, இக்கூட்டம் உதவும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒருவர் சொல்லும் கருத்து ஏற்க முடியாததாக இருக்கும்போதுகூட, உண்மையான உரையாடல் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இப்பேரவையில், ஒவ்வொருவரும் சுதந்திரமாக, தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவது முக்கியம் என்றும் தெரிவித்தார். இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவராக, பத்து ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய, கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ அவர்களுக்கு நன்றியும் தெரிவித்த திருத்தந்தை, தன்னோடு சேர்ந்து பணியாற்றுவது அவ்வளவு எளிது அல்ல என்றும் கூறினார். இவ்வியாழனன்று நிறைவடையும் இக்கூட்டத்தில், இத்தாலிய ஆயர்கள் மூன்று ஆயர்களின் பெயர்களை, திருத்தந்தைக்குச் சமர்ப்பிப்பார்கள். இம்மூவரில் ஒருவரை, இப்பேரவையின் புதிய தலைவராகத் திருத்தந்தை நியமனம் செய்வார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
வருங்கால அமைதிக்கு, கலந்துரையாடலே வழி : திருத்தந்தை
“வருங்காலத்தை பொதுவில் திட்டமிடுவதற்கு, கலந்துரையாடல் நமக்கு உதவுகிறது; கலந்துரையாடல் வழியாக, அனைவரின் நலனில் அக்கறை கொண்ட ஓர் அமைதியை, நாம் கட்டியெழுப்புகிறோம்” என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியில், இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில், இத்திங்கள் இரவு இடம்பெற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்த அறிவற்ற வன்முறைச் செயலில், காயமடைந்தவர்களுக்கும், ஏனையோருக்கும் அவசரகால உதவிகளை ஆற்றிவருகின்றவர்களுக்கு, தனது செபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை. திருத்தந்தையின் இந்தத் தந்திச் செய்தியை, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார். இன்னும், மே 24, இப்புதன் காலை 8.30 மணிக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு ட்ரம்ப் அவர்கள், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்திக்கிறார். திருத்தந்தையைச் சந்தித்த பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் செயலகத்தின் தலைவர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும், ட்ரம்ப் அவர்கள் சந்தித்துப் பேசுவார். இச்சந்திப்புக்களின் இறுதியில், ட்ரம்ப் அவர்கள், வத்திக்கானின் சிஸ்டீன் சிற்றாலயம் மற்றும், தூய பேதுரு பசிலிக்கா பேராலயம் செல்வார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. மேலும், இப்புபுதன் முற்பகல் 11.15 மணியளவில், திருமதி ட்ரம்ப் அவர்கள், உரோம் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனையைப் பார்வையிடுவார் எனவும், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
உலகப்போக்குகளை கண்டிப்போர் சித்ரவதைகளுக்கு உள்ளாவார்கள்
உலகப்போக்குகளைக் கண்டித்ததற்காக எண்ணற்ற துறவியரும் அருள்பணியாளர்களும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர், ஏனெனில் துணிச்சலற்ற, அதேவேளை, சுகம் தேடும் நிறுவனமாக திருஅவை இருக்க வேண்டும் என தீயோன் விரும்புகின்றான் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். உலகப்போக்குகளைக் கண்டிப்போர் சித்ரவதைகளுக்கு உள்ளாவார்கள் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்கு எடுத்துக்காட்டாக, சான் சால்வதோர் பேராயர் அருளாளர் ஆஸ்கர் ரொமேரோவின் வாழ்வைக் குறிப்பிட்டார். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, வாழ்வுமுறைகளை மாற்றி, மகிழ்ச்சியுடன் நற்செய்தியை பறைசாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தவறுகளைக் கண்டவிடத்து அமைதி காப்பவர்கள் தப்பி விடுவதையும், கண்டனக் குரல் எழுப்புபவர்கள் தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதையும், மீட்பு வரலாற்றில் பார்க்கிறோம் எனவும் கூறினார் திருத்தந்தை. ஏழைகளின் சார்பாக உண்மையை ஓங்கி உரைத்ததால் அருளாளர் ரொமேரோ கொலை செய்யப்பட்டதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல நாடுகளில் இத்தகைய நிகழ்வுகள் பல்வேறு காலக்கட்டங்களில் இடம்பெற்றுள்ளன எனவும் கூறினார். ஊதியம் ஈட்டுவதில் அக்கறை காட்டும் ஒரு மதத்தைவிட்டு விலகி, மகிழ்ச்சியுடன் நற்செய்தியை போதிக்கும் மதமாக, திருஅவை உருவெடுக்கவேண்டும் என்றார் திருத்தந்தை. மறைசாட்சிகள் இல்லையென்றாலோ, துணிச்சலற்றதென்றாலோ, கடவுளின் நற்செய்தியை பறைசாற்ற பயந்தாலோ, அது, இயேசுவின் திருஅவையாக இருக்க முடியாது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர் பணிகள் நூலின் பிரிவு 16ன் நிகழ்வுகளை மையமாக வைத்து மறையுரை வழங்கினார். சான் சால்வதோரில் 1980ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், அருளாளராக உயர்த்தப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவாக, இத்திருப்பலியை நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More