அதிகாலையில் செய்யவேண்டியது

காலைதோறும் நீர் அவர்களைச் ஆய்ந்தறிய? மணித்துளிதோறும் அவர்களைச் சோதிக்க? - யோபு 7:18. ஆண்டவருடைய  குரலைக் கேட்பதற்கும், அவருடைய அன்பை சுவைப்பதர்க்கும் ஏற்ற நேரம் அதிகாலை நேரமாகும். காலைதோறும் அவர் நம்மை அறிய ஆசைப்படுகிறார். நாம் அவரை தேடினால் அவரை கண்டடைவோம். 

ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்; வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன் என்று சொல்லும் அளவுக்கு இன்று நம்மில் எத்தனை பேர் அதிகாலையில் ஆண்டவரை தேடுகிறோம். ஆண்டவர் மோயிசனிடம் , காலையிலேயே சீனாய் மலைமேல் ஏறிச்செல். அங்கே மலையுச்சியில் என்முன் வந்து நில் என்று சொல்கிறார். அதன் படி மோயிசன் அவருடைய மகிமையை காண்கிறார்.

விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. 

அதன்பிறகு படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. ஆண்டவர்அவர்கள் பசியாய் இருப்பதை  அறிந்து, எல்லாவற்றையும் ஆயத்தமாக்கி வைத்து, காத்திருந்தார். இயேசு வந்து, அப்பத்தையும், மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். ஆம், இயேசு  அன்புள்ளவர், அக்கறையுள்ளவர். 

நம்மில் பலர் சோர்ந்து போயிருக்கிறோம். தனிமையில் வாடுகிறோம். என்னை விசாரிக்க ஒருவருமின்றி அனாதைபோல நிற்கிறேனே என்று அடிக்கடி சொல்லுகிறோம். அதை ஆண்டவர் கிட்ட சொல்லுவோம். அவர் நம் தேவையை நிறைவு செய்வார். 

செபம்: ஆண்டவரே, எங்களை அறிந்து வைத்திருப்பவரே, இந்த நாளை, வெற்றியாய் கடக்க எனக்கு ஞானத்தை தாரும், சோதனைகளை வெற்றிபெற, வல்லமை தாரும். குடும்பத்திலே சமாதானத்தையும், உள்ளத்திலே சந்தோஷத்தையும் தாரும்.நாள் முழுதும் உம் பிரசன்னத்தை தாரும். உலகை அச்சுறுத்தும் கொடிய வைரஸை அழித்து எல்லா மக்களும் அமைதியாக வாழ அருள் தாரும். ஆமென்.