அப்படியேப்பா

Dialogue between Dad and Son

வாரத்துல ஞாயிற்றுக்றுக்கிழமைன்னா  கொஞ்சம் அதிகமா தூங்குவது என்னுடைய வழக்கம்.
மத்த நாட்களில் அஞ்சரைக்கு எந்திரிக்கிறதுன்னா ஞாயிற்றுக்கிழமையில காலைல 7 மணிக்குதான் எந்திரிப்பேன். ஏன்னா அன்னைக்கு ஒரு நாளைக்குதான் நான் ஃப்ரீயா இருக்க முடியும்.

அது என்னமோ தெரியலைங்க. தூங்கி எழுந்திருச்சதுக்கு அப்புறமா
அம்மா எங்க இருந்தாலும் தேடி போயி அவங்க முதுகு மேலே படுத்து அப்படியே கொஞ்சம் தூங்குறது ஒரு தனி சுகம் தான் போங்க. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளெருந்து இது மாதிரிதான் செய்யறது.
இது எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த சுகமே தனி. யாருக்குத்தாங்க அம்மாவை கட்டி பிடித்து தூங்க பிடிக்காது?!!

இப்படிதாங்க அருணுடைய ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கும். அருண் யாருன்னு கேக்கறீங்களா? அது நான்தாங்க.

என்னுடைய வாழ்க்கையிலே அந்த ஞாயிற்றுக்கிழமையில்ல நடந்த அந்த இரண்டு மணி நேர கதையைத்தான் நான் உங்களுக்கு சொல்லப்போறேன்.

எப்பவும் போல எந்திரிச்சு நானு அம்மாவைத் தேடிப் போனே.  அவங்க சமையலறையில் சமைச்சிக்கிட்டிருந்தாங்க போயி முதுகில படுத்துகிட்டு அப்படியே தூங்கிட்டு இருந்தேன்.

அம்மா "டேய் காபி போடவா டீ போடவா"ன்னு கேட்டாங்க.
நானு "இருமா கொஞ்ச நேரம் தூங்குகிறேன்" ன்னு சொல்லிக்கிட்டே அப்படியே அவங்க தோளில சாஞ்சுகிட்டு இருந்தேன்.
"சரி போய் பிரஷ் பண்ணிட்டு வா"ன்னு  சொன்னாங்க. ஆனா நான் எந்திரிக்கவே இல்லை.

ரெண்டு நாளா கேட்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன் அதை இப்போ கேட்கலாம்னு எனக்கு தோணுச்சு.

"ஏன்மா அப்பா மூணு நாளா கொஞ்சம் பரபரப்பா பதட்டமா இருக்குறாரே?" ன்னு கேட்டேன்.

அம்மா, "டேய் அவரே வந்து உன்கிட்ட சொல்லுவாரு நான் சொல்ல மாட்டே"ன்னு தட்டிக்கழிச்சிட்டாங்க.

நான் விடுவேனா... "அப்போ உங்களுக்கு விஷயம் தெரியும்ல சொல்லுங்க"ன்னு கேட்டனா...

எங்க அம்மாவுக்கு என்கிட்ட ஒரு வீக்னஸ் இருக்கு. நான் ஏதாவது கேட்கிறப்போ என்னுடைய வலது கையால் அவங்களுடைய இடது கன்னத்தை தொட்டு லைட்டா வருடிக்கொண்டே எதைக் கேட்டாலும் கொடுத்துடுவாங்க.

இப்பவும் அதே டெக்னிக்தான்.
வருடிக்கொண்டே "சொல்லுமா சொல்லுமா"ன்னு கேட்டுக்கொண்டே இருந்தேன்.

"முதல்ல போய் பிரஷ் பண்ணிட்டு வா. வந்துட்டு காபி குடி நான் சொல்றேன்"ன்னு சொன்னாங்க.

அந்த ஆர்வம் என்னை தூண்டவே டக்குனு போய் பிரஷ் பண்ணிட்டு குளிச்சு முடிச்சுட்டு வந்து, ஆர்வம் தாங்காம 'சீக்கிரம் சொல்லு மா" னேன்.

கையில காபி டம்பளரை கொடுத்துட்டு,
"அப்பாவுக்கு இந்த வருஷம் ரிடையர்மெண்ட்ல்ல. ரிட்டயர்மென்ட் காசு வரும்ல்ல. அந்த காசு சம்பந்தமாதா  கொஞ்சம் டென்ஷனா இருக்குறாரு. அத வச்சி ஏதோ செய்யணும் அப்படின்னு சொன்னாரு நானும் சரிங்க உங்க இஷ்டப்பிரகாரம் செய்யுங்க அப்படின்னு சொல்லிட்டேன். சரி எதுக்கும் உங்க அக்கா கிட்ட ஒரு அபிப்ராயம் கேட்டு விடலாமுண்ட்டு மசூதி தெருவுக்கு போயிருக்கிறார்"னு அம்மா சொன்னாங்க.

அங்கதாங்க எங்க அக்காவும் மாமாவும் அவங்களுடைய 2 பிள்ளைகளும் இருகாங்க.

"சரி இதுல என்னமா இருக்கு இப்ப படத்டப்படுரதுக்கு"ன்னு நான் கேட்டேன்.
அவங்க "அடேய் அவரே வந்து உன்கிட்ட சொல்லுவாரா...
அவர் வர வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு"ன்னாங்க.

எனக்கா ஒரே குழப்பம்.  இதுக்கு எதுக்கு அப்பா பதட்டமா இருக்காரு... என்ன நடந்துச்சு... ஒன்னும் புரியலையே... என்கிட்ட சொல்லி இருக்கலாமே...எண்டு பல பல குழப்பங்களும் கேள்விகளும்.

காபி குடிச்சிட்டு, பேப்பரையும் லைட்டா பார்த்துட்டு, அம்மா சுட்ட தோசைய சுட சுட ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுகிட்டு முடிகிற நேரத்தில, அப்பா வீட்டுக்குள்ள வந்து சோபால உட்கார்ந்தார்.

"ஏங்க தண்ணி கொண்டு வரவா"... அம்மா கேட்க, "கொண்டா கணகம்" அப்பா சொல்ல, அம்மா தண்ணி கொண்டு வந்து கொடுத்தாங்க.

எனக்கு கேக்கலான்னுதான் தோணுச்சு அவரே டென்ஷனில் இருக்கிறார் அவரே சொல்லட்டும் நாம பொறுமையாக இருப்போம்னு விட்டுட்டேன்.

அப்பா இப்போ பொறுமையா ஆரம்பிச்சாரு. "தம்பி"னு என்ன கூப்பிட்டாரு.
நானும் "என்னப்பா" அப்படினுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்டேன்.
உண்மையிலே எனக்கு ஒன்னும் தெரியாது தாங்க.

அப்பா தயக்கத்தோடு இழுத்து இழுத்து பேசினாரு. "இந்த வருஷம் இன்னும் ஆறு மாசத்துல எனக்கு ரிட்டயர்மென்ட். ரிட்டயர்மென்ட் காசு வரும். ஏற்கனவே நாம் எடுத்த லோன் எல்லாம் போக கைக்கு எட்டு லட்ச ரூபா வரும். அக்கா வீடு கட்டிக்கிட்டு இருக்கறால்ல, அதுக்கு அக்காவுக்கு நாலு லட்சம் உனக்கு 4 லட்சம் அப்படினுட்டு பிரிச்சு வைத்திருந்தேன்"னாரு.

நான் குறுக்கிட்டு, "அப்பா இது உங்க காசு, உங்க இஷ்ட பிரகாரம் செய்யுங்க. என்கிட்ட ஏம்பா இத இவ்ளோ சீக்கிரம் சொல்றீங்க. உங்களுக்கு இஷ்டப்பிரகாரம் செஞ்சிட்டு மீதி இருக்கிறத இந்தாப்பான்னு சொல்லி ஏதாவது கொடுக்க ஆசைப்பட்டீங்ண்ணா குடுங்க, மத்தபடி உங்க விருப்பம்தாம்பா என் விருப்பமும்"னு சொன்னேன்.

அதுக்கு அப்பா "சந்தோஷம், ஆனாலும் இதை நான் இப்போ உன்கிட்ட சொல்லி ஆகணும். இதில அதிகமாக பாதிக்கப்படுவது நீதான். அதனால உன் விருப்பம் ரொம்ப முக்கியமானது"னு சொன்னாரு.

இப்போ எனக்கு ஒரு வகையான படபடப்பு வந்துடுச்சு. என்னன்னு தெரியலையே அப்படினுட்டு குழப்பமும் வந்துருச்சு. அம்மாவை பார்த்தேன் அவங்க எந்த ரியாக்ஷனும் இல்லாமல் சைலண்டா இருந்தாங்க.

மனசுக்குள்ள லைட்டா கோவம். 'நீயாவது சொல்லியிருக்கலாமேமா'ன்னு. அம்மாவும் என் பார்வையை புரிஞ்சுகிட்டு, "இது எனக்கே புதுசா இருக்குடா"னு சைகையில் சொன்னாங்க.

அப்பா மறுபடியும், "இந்த விஷயமா அக்கா கிட்ட பேச போனேன். அக்காவுக்கு நாலு லட்சம் பத்தாது. அஞ்சரை லட்சம் வேணும்னு கேட்டா.

அப்படி குடுத்துட்டா உனக்கு ரெண்டு லட்சம் தான் வரும்".

நான் மறுபடியும் குறுக்கிட்டு, "இதெல்லாம் ஒரு விஷயமே இல்லபபா. விடுங்க எட்டு லட்சத்தையும் அக்காவுக்கே கொடுங்க" னு நான் சொல்லிட்டேன்.

அப்பா அதுக்கு "இல்லப்பா, நீ இப்படி சொல்லுவேன் எனக்கு தெரியும். ஆனாலும் ஒரு சின்ன ஆசையும் ஒரு சிக்கலும் இருக்கு".

நானொ "அது என்னப்பா?" அப்படின்னு கேட்டேன்.

"அக்காவுக்கு அஞ்சரை இலட்சம் குடுக்கணும் வீடு கட்டுர வேலை பாதியிலேயே நிக்குது. மீதி இருக்குற உன் பங்குக்கு, அந்த காசையும் உனக்கு கொடுக்க முடியாம போய்விடுமேன்னு பதட்டமா இருக்கு"ன்னாரு.

நானோ சரி அவர் சொல்லட்டும் என்று விட்டுட்டேன்.

"அந்த இரண்டரை லட்சத்தை எங்க ஆபீஸ்னுடைய வாட்ச்மேனுடைய பொண்ணு காலேஜ் படிப்பிற்கு கொடுக்கலாமுன்னு நெனச்சிகிட்டு இருக்கிறேன்.
அது நல்லா படிக்கிற பொண்ணு. அந்த வாட்ச்மேனாள அவ்வளவு தூரம் சப்போர்ட் பண்ண முடியாது"ன்னு அவரு சொல்லிட்டு இருக்கப்போவே யாரோ கேட்டு தொரந்த சத்தம் கேட்டுச்சு.

அம்மா விடுவிடுன்னு போயி பார்த்துட்டு சிரிச்ச முகமா திரும்பி வந்தாங்க.

அப்பா அது யாருன்னு கேட்க, "உங்கள பாக்கணும் னு சொன்னாங்க உட்காருங்க ன்னு சொல்லிட்டு வந்திருக்கிறேன்" அப்படின்னு சொல்லிட்டு என்ன பாத்தாங்க.

இப்போ நான் பேச வேண்டிய நேரம். நான் பேசுறத வச்சிதன் அப்பாவுக்கு நிம்மதியா சங்கடமா அப்படின்னு தெளிவு வரும்.

நான் இப்போ பேச ஆரம்பிச்சேன். "அப்பா உங்க எண்ணம் ரொம்ப நல்லது. அது பிரகாரமே செய்யுங்க. உங்களுக்கு அது நிம்மதியின்னு பட்டா செய்யுங்க.
உங்க காசை விட நீங்க தாம்பா எனக்கு உசத்தி".

அப்பாவுக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு. அம்மா சிரிச்சுகிட்டே நான்தா அப்பவே சொன்னேன்ல, அவன் அப்படித்தான் சொல்லுவான்னு" னு சொன்னாங்க.

எங்க அப்பா அழுதது எனக்காக இல்லிங்க, அந்த பெண் பிள்ளையோட படிப்பு உறுதியானது அந்த சந்தோஷத்துல.

திடீர்னு வெளியில உட்கார்ந்து இருந்தவங்க உள்ளே வந்தாங்க. அது வேற யாரும் இல்ல எங்க அக்காவும் மாமாவும்.

வந்தவுடனே எங்க அக்கா சொன்னா "எனக்கு தெரியும் டா தம்பி நீ இப்படி தன் சொல்லுவன்னு, அப்பா வந்து பேசிட்டு போனதுக்கு அப்புறமா நானும் உங்க மாமாவும் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம்.

இந்தா நாங்க கட்டிக்கிட்டு இருக்க வீட்டு பத்திரம். உன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிக்கோ" அப்படின்னு சொல்லி எங்கிட்ட கொடுத்தாங்க.

தூரத்தில் சர்ச்சில மணி அடிச்சி இறைவசனம் சொல்லிச்சு,

"கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். அமிக்கு குலுக்கி உங்கள் மடியில் போடப்படும்".

இது எவ்வளவு உண்மை.

இருங்க கதை இன்னும் முடியல.

இது அந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்னரை மணிநேரம் நடந்துச்சு.

இன்னொரு ஞாயிற்றுக்கிழமை அரைமணி நேரம் நடந்த கதையை சொன்னாதான் இது நிறைவடையும்.

இதுக்கு மத்தியில
அந்த வீட்டை எங்க மாமாவே என் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணாரு,
எனக்கு கல்யாணம் ஆச்சு,
ஒரு பையன் பிறந்தான்,
எனக்கு சென்னையிலே வேலை மாத்தி வந்திருச்சு,
நான் சென்னைக்கு வந்துட்டேன்.

என்கூட காலேஜ்ல படிச்ச என் பிரண்டு பிரிட்டோ,
அவனுக்கு எங்க ஊருக்குள்ள வேலை மாற்றி வந்துச்சு.

அவன் இருக்கிறது எங்க அக்கா எனக்கு கொடுத்த வீட்டில.

நான் இருக்கிறது அவனுடைய வீட்டில சென்னையில சாஸ்திரி நகர்ல.

எங்க அப்பா அம்மா அதே வீட்டுல இருக்காங்க. அதுக்கு வாடகை நான் கட்டிட்டு இருக்கேன்.

இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.
என் பையன் என் மேலே படுத்து தூங்கிட்டு இருக்கிறான்.
அதாவது அரை தூக்கம் தான், நான் எங்க  அம்மா முதுகில் சாய்ந்து தூங்குன மாதிரி என் பையன் என் மார்ல படுத்து இருந்தான்.

கோயில ஃபாதர் பிரசங்கம் வச்சுக்கிட்டு இருக்குறாரு.

போப் ஆண்டவருடைய ஏதோ ஒரு செய்திய
சொல்லிக்கிட்டு இருக்காரு.

"உடன்பிறந்த உணர்வு. அவர்களுக்கும் நாம் செய்ய கடமைப்பட்டு இருக்கிறோம். வாழ்வு, உணவு, உடை, இருப்பிடம், மருந்து, பாதுகாப்பு, இவை உறுதி செய்யப்பட வேண்டும்" அப்படின்னு ஃபாதர் பேசிக்கிட்டிருந்தாரு.

என் மகன் சொன்னா "நாமளும் உதவி செய்யனுதானேபா, நாம என்ன செய்யலாம்? அப்பா, நான் உங்கள பாக்க உங்க ஆபீஸ்க்கு வரப்போ, அந்த செக்யூரிட்டி அங்கிள், எனக்கு கூட ராயல் சல்யூட் பண்ணி, எதிர்காலத்துல உன்னுடைய பெரிய நிறுவனத்திற்கு நீ வரப்போ, நானும் இது மாதிரி உனக்கு சல்யூட் பண்ணனும், சரியா, நீ பெரிய ஆளா வரணும் சரியா? அப்படின்னுவரே, அவருக்கு இந்த உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, மருத்துவம், இதெல்லாம் கிடைக்கிற மாதிரி பாத்துக்கலாம் இல்ல...?".

நான் என் மகன்கிட்ட 'அப்படியேப்பா, தங்கம், சொல்லிட்டல்ல'ன்னேன்.  
மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே 'அப்படியே அப்பா'. பெயரிலும் சரி குணத்திலும் சரி.
சுரேஷ் எங்க அப்பா பேரு.

நம்மை சார்ந்திருக்கும்  மனிதர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்வோம்.
இதுவே உடன்பிறந்த உணர்வு.

Written by Rev. Fr. Prakash Philemen Raj SdC