ஏதோ ஒன்று நிரப்புகிறதே!?!

நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன் - எசாயா 48:10. எல்லா இன்னல்களுக்கு இடையேயும் என் உள்ளத்தில் ஆறுதல் நிறைந்திருக்கிறது. மகிழ்ச்சி பொங்கிவழிகிறது என்று திருத்தூதர் பவுல் சொல்லுகிறார். 

பொதுவாக, நாம் எல்லாம் நிறைவாயிருக்கும்போது சந்தோசமாக இருப்போம். ஆனால் துன்பங்கள் வந்துவிட்டாலோ முகம் வாடிவிடுவோம். உற்சாகம் பறந்து போய்விடுகிறது. நிம்மதியை இழந்து விடுகிறோம். ஆனால், தங்களை முற்றிலும் கடவுளுக்கு அர்ப்பணிகிறவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருப்பார்கள்.  ஆண்டவர் தங்களுக்கு எல்லாம் நல்லதாகவே  செய்வார்  என்று நம்புவார்கள். 

நாம் நம்பிக்கையிலே சந்தோசமாயிருக்க வேண்டும். துன்பத்திலே  பொறுமையாயிருக்க வேண்டும். செபத்திலே உறுதியாய் இருக்க வேண்டும். எனக்குத் துன்பம் விளைந்தது நன்மைக்காகவே;  அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன் என்று தாவீது அரசர் சொல்கிறார். 

திருவெளிப்பாட்டு நூலில்: “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்என்று வருகிறது. அப்படிப்பட்டவர்கள் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார். நாமும் துன்பம் வரும்போது சோர்ந்து போகாது ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்று கடந்து செல்வோம்.

செபம்: ஆண்டவரே, என் வாழ்வில் எனக்கு வரும் துன்பங்களை எதிர்கொண்டு, மனம் சோர்வுறாமல் கடந்துசெல்ல வல்லமை தாரும். துன்ப வேளைகளில் நாங்கள் இன்னும் உமக்குள் பலப்பட அருள் தாரும். ஆமென்.