நல்ல வாய்ப்பு

அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம் - எசாயா 53:5. நமக்கு ஆண்டவர் கொடுத்துள்ள பாவ மன்னிப்பு ஒரு நல்ல அருட்சாதனம் ஆகும். அந்த பாவ மன்னிப்பை நாம் அற்பமாய் எண்ணிவிடக்கூடாது. பாவத்தை மன்னிக்கத்தான் கடவுள் இருக்கிறாரே, என்று எத்தனை முறை வேண்டுமானாலும் பாவம் செய்யலாம் என்று  இருந்து விடக்கூடாது.

இயேசு இகழப்பட்டார்; புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும்  இயேசுமேல் சுமத்தினார்.

உண்மையை அறிந்தபின்னரும், வேண்டுமென்றே நாம் பாவத்தில் நிலைத்திருந்தால், இனி நமக்கு வேறு எந்தப் பாவம்போக்கும் பலியும் இராது. நாம் மீண்டும் மீண்டும் பாவம் செய்தால், இறைமகனைத் நாம் மீண்டும் மீண்டும் சிலுவையில் அறைந்து, வெளிப்படையாக இழிவுபடுத்துகிறவர்கள் ஆவோம். 

செபம்: ஆண்டவரே நான் பாவமன்னிப்பின் உன்னதத்தை உணராமல், திரும்பத் திரும்ப பாவம் செய்து உம்மை வேதனைப்படுத்திவிட்டேன் அப்பா. என்னுடைய பாவங்களினால் மேலும் மேலும் உம்மை புண்ணாக்கி விட்டேனே. என்னை மன்னியும்.  இனிமேல் பாவத்தில் தவறி விழாது இருக்க எனக்கு ஆவியின் பழத்தை தாரும்.  ஆமென்.