பொங்கல் வாழ்த்துக்கள் | சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்  | Pongal Celebration | Poem

மாதவனைக் கும்பிட்ட மார்கழித் திங்கள் - முடிந்து 

ஆதவனைக் கும்பிடுவோம் தை முதல் நாளில்  

பனி மூட்டம் விலகுதல் போல் பாரினிலே மாந்தர்கள் 

பட்ட துன்பம் விலகட்டும் போகி நன்னாளில். 

தீய எண்ணங்களை போகித் தீயிலிட்டுக் கொளுத்தி    

தூய எண்ணங்களோடு துவங்கிடுவோம் நாளை. 

கதிரறுத்த வயலினிலே, களமொன்று ஏற்படுத்தி 

கதிரவனுக்குப் பொங்கல் படையல் செய்திடவே 

புத்தடுப்பு  கொண்டுவைத்து. புதுப்பானை அடுப்பிலேற்றி 

கொத்து மஞ்சள் அதன் கழுத்தினிலே சுற்றிவைத்து 

புத்தாடை தானுடுத்தி, பூசைகள் தான் நடத்தி 

இத்தனை நாள் உழவுக்கு, உறுதுணையாய் இருந்திட்ட 

கதிரவனுக்கும், காளைகளுக்கும் நன்றி செலுத்தும் நாள். 

உழவர்திருநாள் என்றும், தமிழர் திருநாள் என்றும்    

புத்தாண்டு நாள் என்றும், பலவாறு அழைத்திடுவார்.

சங்கராந்தியென்பார், பைசாகி என்றிடுவார் , 

பாரதம் முழுவதும் இருக்கின்ற மக்களெல்லாம்

பல்வேறு பெயர்களில் இந்நாளை அழைத்திடுவார்.

அனைவரும் கொண்டாடும் சமத்துவப்பொங்கலன்றோ. 

பெயரில் என்ன உண்டு, பேரின்பம்தான் வேண்டும்.   

வயலில் உழைப்பவனின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும்.

சோறூட்டும் விவசாயியின், சோகம் தீரவேண்டும். 

இயற்கையும் அவனுக்கு இன்னல் தராதிருக்கவேண்டும். 

அளவோடு மழைபெய்து அறுவடை சிறக்கவேண்டும். 

உழவன் வாழ்ந்தால்தான் உலகோர்க்கு வாழ்வு எனும் 

உண்மையுணர்ந்து நாம் உழவரைபோற்றிடுவோம். 

மங்கட்டும் இந்த மன்பதையில் துன்பங்கள் 

பொங்கட்டும் பூவுலகில் பொலிவான இன்பங்கள்.