மத சார்பற்ற நற்செயல்

பொதுவாக, நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர்களில், வீரர்கள் தங்களின் உயிரை விடுவது என்பது மனதிற்கு கவலை அளித்தாலும், நடந்தேறும் போர்களில், வீர்கள் தங்களின் உடல் உறுப்புகளை இழந்து வாழ்நாளை கழிப்பது என்பது கடினமான செயலே ஆகும். அப்படி இருக்கும் வீரர்களுக்காகவே பணியாற்றி வருகின்றனர், வியட்நாமைச் சேர்ந்த கத்தோலிக்க அமைப்பினர்.

வியட்நாமைச் சேர்ந்த ஹோ சி மின் பெரு நகரத்தைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற போர்வீரர்கள், பொதுவாகவே கம்யூனிச அரசால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்றும், கொரோன நோய் பரவிக்கொண்டிருக்கும் காலத்திலும், அவர்களின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது.

இந்நிலையில், கத்தோலிக்கர்களும், புத்த மதத்தினரும் இணைந்து, இந்த வீரர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வண்ணம், புத்த மதத்தை சேர்ந்த ட்ரொயுங் என்பவர், வெளிநாடுகளில் வாழும் வியட்நாம் மக்களிடம் திரட்டிய 60,000 டாலர்கள் நிதி உதவியை, உலக மீட்பர் துறவு சபையின் உறுப்பினர்களிடம் வழங்கினார்.

புத்த மதத்தினர் வழங்கிய நிதியினால், ஹோ சி மின் பெரு நகரத்தின் 24  பகுதிகளில் வாழும் 1,181 ஓய்வு பெற்ற வீரர்கள், உலக மீட்பர் துறவு சபையினரால் பலனடைந்து வருகின்றனர்.

உலக மீட்பர் துறவு சபையினர், வியட்நாம் போரினால் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களுக்காக பணியாற்றி வருகின்றனர். மேலும் சிறப்பாக, கோவிட்-19 கொள்ளைநோயினால் துன்புறும் வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.