எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

13 பிப்ரவரி 2024
பொதுக்காலம் 6ஆம் வாரம் -செவ்வாய்
யாக்கோபு  1: 12-18   
மாற்கு 8: 14-21


எங்களைச்  சோதனைக்கு உட்படுத்தாதேயும்!


முதல் வாசகம்

 
தீயோனிடமிருந்து வரும் சோதனைக்கும் கடவுளிடமிருந்து வரும் அருள்கொடைக்கும்  இடையிலான  வேறுபாட்டை இன்றைய வாசகங்கள் நமக்குத் தெளிவுப்படுத்துகின்றன. 

முதல் வாசகத்தில், எருசலேமின் முதல் ஆயரும், யோவானின் சகோதரருமான திருத்தூதர் யாக்கோப்பு நேற்றையத்  தொடர்ச்சியாக, சோதனைகள் குறித்து விவரிக்கிறார்.  குறிப்பாக, சோதனை காலங்களில்  சோர்ந்து, தளர்ந்து போகாமல் கடவுளோடு  விடாமுயற்சியுடன் இருப்பவர்கள் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள் என்று  குறிப்பிடுகிறார். 

நமக்கு வரும் சோதனைகளுக்குக் கடவுள் காரணமானவர் அல்ல என்ற உண்மையை வலியுறுத்தி போதிக்கின்றார் யாக்கோபு.  ஏனெனில் கடவுள்  நன்மைகளுக்கு அல்லது அவரது அருள் கொடைகளுக்கு  மட்டுமே மூலகாரணமாக  இருக்கிறார். ஆகவே, சோதனைகள் கடவுளின் விருப்பத்திற்கு முரணாக ஒருவரின் சொந்த ஆசைகளிலிருந்து வருகின்றது என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.   

அத்தோடு, நல்ல கொடைகளும்  நிறைவான வரங்களும்  கடவுளுடையவை என்றும், இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் ‘நன்மை’ என்பதும், விண்ணக வாழ்வில்  நமக்குக் காத்திருக்கும் மகிழ்ச்சியின் ஒரு  முன்சுவை என்பதும் அவருடைய படிப்பினையாக உள்ளது.  


நற்செய்தி.


நற்செய்தியில், இயேசுவும் அவருடைய சீடர்களும் கடலைக் கடந்து செல்லும் தங்கள் பயணத்தின்போது நிகழ்ந்த உரையாடலை வாசிக்கிறோம். பயணத்தைத்  தொடங்கும்போது, இயேசு அவர்களிடம்  “பரிசேயர், ஏரோதியர் (சதுசேயர்)  புளிப்பு மாவைக் குறித்துக் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருங்கள்” என்று அறிவுறுத்துகிறார்.
  
சீடர்கள்,   இயேசுவின் அறிவுறுத்தலைத் தவறாகப் புரிந்துகொண்டு, கடலைக் கடந்து செல்லும் பயணத்திற்கு போதிய அப்பங்களைக்  கொண்டு வராததற்காக இயேசு அவர்களைத் திட்டுவதாகப் புரிந்துகொள்கிறார்கள்.  இது இயேசுவுக்கு சற்று வேதனையாக இருந்தது. அவர் சொல்லவருவதைப்  புரிந்துகொள்ளாததற்காக  அவர்களைக் கண்டிக்கிறார். பரிசேயர், ஏரோதியரின்  புளிப்பு மாவானது  பாமர மக்களுக்கு அதிக தீமைகளைக் கொண்டுவரக்கூடியது  என்று இயேசு எடுத்துரைப்பதைச்  சீடர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? என்று மேலும் அவர்களைக் கேட்கிறார்.
 
அவர்கள் வயிற்றுக்கான உணவைப் பற்றி கவலைப்படுகின்றனர்.  இதை அறிந்த இயேசு, ஐந்து அப்பங்களை  ஐயாயிரம் பேருக்கும், ஏழு அப்பங்களை   நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்த வல்ல செயலை எடுத்துகூறி, அவர்  அருகில் இருக்கும்போது ஏன் உணவுப் பற்றிய அச்சம் என்று சீடரைக் கடிந்துகொள்கிறார்


சிந்தனைக்கு.


நமக்கான சோதனைகள் அனைத்திற்கும் தீயோன் அல்லது அலகையே  காரணம். அவன்தான் சோதிப்பவனும் சோதனையில் வீழ்த்துபவனுமாவான். இதற்காக நமது பலவீனங்களைப் பயன்படுத்துபவன் அவன். ஆம். இயேசு பசியோடு இருந்த வேளையில்தான் தீயோன் அவரை அனுகினான். இயேசுவிடமிருந்தும் அவரது மறைவுடலாகிய திருஅவையிலிருந்தும் நம்மைப் விலக்குவதுதான் தீயோனின் பெரும் முயற்சியாக இருந்து வருகிறது. இன்று, விலகிச் சென்று அதிகளவில் பணம் சம்பாதிக்கும் கூட்டம் பெருகி வருகிறது. 


நற்செய்தியில் இயேசு குறிப்பிடும் “பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்” என்பது,  அவர்களின் மறைமுகமான திட்டத்திற்கு  அல்லது சூழ்ச்சிக்கு  எதிராக எச்சரிக்கையாக இருங்கள்  என்று இயேசு தம் சீடர்களுக்கு அறிவுறுத்துவதாகப் பொருள் கொள்ளலாம்.  அதே எச்சரிக்கையை நமக்கும் இயேசு விடுக்கிறார். 

சோதனையை வெல்ல கடவுளின் உதவி தேவை. இதனால்தான் ‘எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்' என்று மன்றாட இயேசு கற்றுக்கொடுத்தார். அவரும் மனித இயல்பில் தந்தையிடம் மன்றாடினார்.  

ஒரு பழைய திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது. மிசியம்மா படத்திற்காக தஞ்சை இராமையா தாஸ் அவர்கள் எழுதிய ‘என்னை ஆளும் மேரி மாதா' என்ற பாடல். இப்பாடலில்,  

’நெறி மாறி வந்ததாலே நகைப்பானதே என் வாழ்வே, கணமேனும் சாந்தி இல்லையே அணு தினமும் சோதியாதே’ என்ற வரிகள் இருக்கும். இதன்படி பார்க்கப்போனால், நம் அன்னை மரியா நம்மை சோதிப்பதாக கருத வேண்டியிருக்கும். இது, உண்மையா? நம் அன்னை மரியா தன் பிள்ளைகளைச் சோதிப்பவரோ அல்லது சோதனைக்கு உட்படுத்துபவரோ அல்ல. 

மடமை உலகம் நம்மை சிறுமைப்படுத்துகிறது. எனவே, படகில் இருந்த சீடர்களைப் போல் நாம் வயிற்று உணவுக்காக ஆண்டவரில் கொண்ட நம்பிக்கையை கைவிடக்கூடாது. பணம் சம்பாதிக்க பல நேர் வழிகள் இருக்கும் போது இயேசுவின் திருவுடலைக் கூறுபோட்டுதான் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. அது அலகையின் சூழ்ச்சி என்பது வெள்ளிடைமலை. 

லூக்கா நற்செய்தியில் 22:3-ல், ‘அந்நேரத்தில் பன்னிருவருள் ஒருவனான யூதாசு எனப்படும் இஸ்காரியோத்துக்குள் சாத்தான் புகுந்தான்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்து. ஆகவே, லூக்கா 4:13-ல், இயேசுவிடம் தோல்வி கண்ட அலகை, ஏற்ற நேரம் வரை காத்திருந்து, யூதாசில் புகுந்து நாச வேலை செய்தது. 

விண்ணக வாழ்வின் முன்சுவையை இவ்வுலகில் நம்மை அனுபவிக்க விடாமல் தடுக்கும் நோக்கம்தான் அலகையின் முதன்மையான நோக்கம். அதிலும் நற்கருணை வழிபாட்டில் நாம் தவறாமல் பங்கெடுப்பது அலகைக்கு பிடிக்காத ஒன்று. யூதாசில் புகுந்ததுபோல் நம்மில் பலரின் சிந்தனையில் புகுந்தும் குழப்பங்களை ஏற்படுத்துகிறான். சிலர் பிரிந்து செல்கிறார்கள், அலகை கொக்கரிக்கிறான். 

இயேசுவிலும் அவரதுத் திருவுடலாகிய திருஅவையிலும், நற்கருணையே நமது நம்பிக்கை வாழ்வின் உச்சமும் ஊற்றுமாக உள்ளது என்பதை ஏற்று,  ஒன்றித்துப் பயணிப்போம். அதே அலகை நம்மைக் கண்டு ஓடுவான். விண்ணக வாழ்வு நமதாகும். உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? என்று இன்றும் இயேசு நம்மை கேட்கிறார். நமது பதில் என்ன? விழித்தெழுவோம் அலகையை வெல்ல... 


இறைவேண்டல்.

‘வழியும் உண்மையும் வாழ்வும் நானே’ என்று முழங்கிய இயேசுவே, உம்து திருவுடலாகிய திருஅவையில் நான் பயனுள்ள ஓர் உறுப்பாகத்  திகழ்திட துணைபுரிவீராக. ஆமென்


 ஆர்.கே. சாமி. (மலேசியா)
 ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

Mary Cecilia R… (not verified), Feb 12 2024 - 5:48pm
அருமை சாமி ஐயா

Thanks To Radio Veritas Tamil...
Mary Cecilia R… (not verified), Feb 12 2024 - 5:50pm
அருமை சாமி ஐயா

Thanks Radio Veritas Tamil...
Selvi (not verified), Feb 13 2024 - 7:22pm
Excellent 👍