சாட்சிய வாழ்வுக்கே தூய ஆவியார்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

7 மே 2024  

பாஸ்கா 6ஆம் வாரம் - செவ்வாய்

தி.பணிகள் 16: 22-34

யோவான்  16: 5-11

பவுலும்  சீலாவும்  பிலிப்பி நகரில் பணி புரியும் போது,  ஒரு கொத்தடிமைப் பெண் குறி (சோதிடம்) சொல்லும் ஆவியைத் (தீய ஆவியை) தம்முள் கொண்டு பலவாறு சோதிடம்  சொல்லி பிழைப்பு நடத்தி வந்தாள். அவள் ஓர் அடிமையாதலால் அவளது எஜமான்கள் அப்பெண்ணைப் பயன்படுத்தி, தங்களுக்கு வருமானம் தேடிக்கொண்டிருடிருந்தனர். பவுல், அப்பெண்ணைக் குணப்படுத்தினார்.
 
அவரை அடிமையாக வைத்திருந்தவர்கள் இதைக் கண்டு தங்களுடைய வருவாய்க்கான வாய்ப்பெல்லாம் போய்விட்டதே என்று பவுலையும் சீலாவையும் பிடித்து,  ஆட்சியாளரிடம் இழுத்துச் சென்றார்கள். “இவர்கள் யூதர்கள். நமது நகரில் கலகம் விளைவிக்கிறார்கள்’ என்று ஒரு பொய் குற்றச்சாட்டை  இருவர் தலையிலும் போட்டார்கள்.  போதிய விசாரணையின்றி, அவர்கள்  சிறைப்படுத்தப்பட்டார்கள்.   
மகிழ்ச்சி பொங்க சிறையில் பவுலும்  சீலாவும் பாடிக் கடவுளை போற்றிக்கொண்டிருக்கும் வேளையில், பிலிப்பியில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக  சிறைச் சுவர்களும்,  கதவுகளும், பூட்டிய விலங்குகளும் சங்கிலிகளும் சிதறி விழுந்தன என்று லூக்கா விவரிக்கிறார். அவ்வேளையில். காவலர்களுக்குத் தெரியாமல்  அடைக்கப்பட்ட கைதிகள் தப்பியோடியிருக்கலாம் என்று நினைத்து,  காவலர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படலாம் என்று எண்ணி,  தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர். 
அங்கிருந்த பவுல் அடியாரும் சீலாவும் அவர்கைளத் தடுத்து, கைதிகள் எவரும் தப்பவில்லை என்று உறுதிப்படுத்தி அமைதிப்படுத்தினர். இவற்றையெல்லாம் மிகுந்த அச்சத்துடனும் ஆச்சரியத்துடனும் கேட்ட சிறைக் காவல் அதிகாரி பவுலின் காலில் விழுந்து, இப்புதுமையைச் செய்த கடவுளின் அருளைத் தனக்கும் அருளுமாறு வேண்டினார். அவர் "பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டதாக லூக்கா குறிப்பிடுகிறார்.  அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள் என்று அறிகிறோம். உண்மை கடவுளை அறிந்துகொண்டதன் மகிழ்ச்சியால், அந்த சிறை காவல் அதிகாரி, பவுலையும், சீலாவையும் தன் வீட்டிற்கு அழைத்து பந்தி வைத்தார், உணவு பரிமாறி மகிழ்ந்தார்.


நற்செய்தி.

இறைய நற்செய்தியில், இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு  முன்பு தனது சீடர்களிடம் பேசுகிறார்.   தந்தையாகியக் கடவுளைக் குறிப்பிட்டு, தன்னை அனுப்பியவரிடமே செல்வதாக இயேசு தம் சீடர்களிடம் கூறுகிறார். அவர் எங்கு செல்கிறார் என்று அவரது சீடர்கள் யாரும் அவரிடம் கேட்கவில்லை என்று இயேசு தமது வியப்பை  வெளிப்படுத்துகிறார். 

சீடர்கள் வருத்தப்பட்டாலும்,  அவர் பிரிந்து செல்வதே அவர்களுக்கு நல்லது என்று இயேசு   உறுதியளிக்கிறார்.   அவர் செல்லவில்லை என்றால், துணையாளரான  தூய ஆவியார்  அவர்களிடம் வரமாட்டார் என்று இயேசு விளக்குகிறார். தூய  ஆவியின் வருகைக்கு அவருடைய புறப்பாடு அவசியமாகிறது. தூய ஆவியார்தான்,   பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை  என்று சீடர்களுக்குத்   தெளிவுப்படுத்தவார்  என இயேசு கூறுகிறார். 

சிந்தனைக்கு.

இயேசு தம்முடைய சீடர்களிடம் அவர் தூய ஆவியாரை  அனுப்புவதற்கு தந்தையிடம் செல்ல வேண்டியதன் அவசியத்தைப் பற்றி தொடர்ந்து விவரிக்கிறார். இன்றைய வாசகங்களைப் பற்றி சிந்திக்கும்போது,  தொடக்கக் காலத்தில் இயேசுவின் சீடர்களாக  வாழ்வது  உண்மையிலேயே பெரும் சவாலுக்கு  உட்டபட்டதாகக் காண்கிறேன்.  அன்று அவர்களில் ஒருவராக நான்   வாழ்ந்திருந்தால்  எப்படி  வாழ்ந்திருப்பேன் என்று எண்ணிப் பார்க்கிறேன். இன்றளவு நான் இயேசுவின் சீடனாக வாழ்வதற்கு என்னை இயக்கிக்கொண்டிருப்பவர் தூய ஆவியார்தான் என்பதை உணர்கிறேன்.

அன்று நிலவிய சவால்கள் இன்றும் தொடர்கின்றன. எனவே, நமது நம்பிக்கை வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றியும் சவால்களைப் பற்றியும் நாம் ஆழமாகச்  சிந்தித்துப் பார்க்க வேண்டும்.   இன்று,  துணிவோடும் வெளிப்படையாகவும் கடவுள்  எதைக் கேட்டாலும் முன்வந்து செய்ய நமக்கும் துணிவு இருப்பதில்லை. நாம்  உலகப் பற்றை முன்வைத்து  பயப்படுகிறோம். குடும்ப நிலை நம்மைத் தடுக்கிறது. எனவேதான், பல நாடுகளில் நம் அருள்பணியாளர்கள் திருஅவையின் பொருட்டு தங்களைத் தியாகம் செய்கிறார்கள். ஏனெனில், இவர்களுக்கு நாதி கிடையாது. 

முதல் வாசகத்தில், பவுலும் அவரோடு இருந்த சீடர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளையில்  அவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடுகிறார்கள்.  தப்பியோட வாயப்பும் கிடைக்கிறது. ஆனால்,  அவர்கள் தப்ப நினைக்கவில்லை. அவர்களின் அந்த செயல், காவல் காத்துக் கொண்டிருந்த காவலரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிற அனுபவமாக இருக்கிறது. ஒரு நிகழ்வை கடவுள் எப்படி அற்புதமாக, பயன்தரும் அனுபவமாக மாற்றக்கூடும் என்று நமக்கு வெளிப்படுத்துகிறார் கடவுள். 

ஆம், அக்காலத்தைப் போலவே, கடவுள் இன்றும் நம்மில்  அற்புதச் செயல்களைச் செய்ய தயாராக இருக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம் கண்களைத் திறந்து, கடவுளில் முழு நம்பிக்கை வைத்து, அவரது மீட்புப் பணியின் உடன் உழைப்பாளிகளாக நம்மை மாற்ற வேண்டியதுதான்.  

அடுத்து, இன்றைய சமூகத்தில்  பலர் நல்லது என்று நினைத்துக்கொண்டு மேலும் மேலும் பாவத்தைச் செய்து கொண்டிருக்கிறோம்.  இது ஒருவகையில் அறியாமயாகும்.  இந்நிலையில் இருந்து நம்மை காக்க வல்லவர் தூய ஆவியார் தான் என்று  இயேசு கூறுகிறார்.

நிறைவாக சீடர்கள், இயேசு தங்களை விட்டுப் பிரிந்துச் செல்லப் போகிறார் என்பதை சிந்தித்து கவலையில் இருக்கும் வேளையில், இயேசுவோ தந்தையிடம் செல்வதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார். இங்கு கவலையில் இருந்த சீடர்களை இயேசு மாற்றி யோசிக்கத் தூண்டுகிறார். கவலை எதற்கும் மருந்தாகாது. சிக்கலான சூழலில் மாற்றி யோசிக்கத் தொடங்கினால் சிந்தனை தெளிவுப்பெறும்.   ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற தன்னமில்லாத எண்ணத்தில் நற்செய்தியாளராக நம்மை நாம் மாற்றி யோசிக்க வேண்டும். 


இறைவேண்டல்.

திருத்தூதர்களைத் தூய ஆவியாரின் துணையில் திடப்படத்திய ஆண்டவரே, எனது வாழ்வில் தூய ஆவியானவரோடு நான்  ஒன்றித்து  உமது பணியில் முன்னோக்கிச் செல்ல  அருள்புரிவீராக. ஆமென்

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452