நம்மிடம் மிகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளதை உணர்ந்து செயல்படத் தயாரா ? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

நம்முடைய வாழ்க்கையில் சிறிய பொறுப்பாக இருந்தாலும் கடமை உணர்வோடு செய்ய முயற்சி செய்வோம்.

பொதுக்காலம், வாரம் 29 புதன்  
மு.வ: உரோ:  6: 12-18
 ப.பா: 
திபா 124: 1-3. 4-6. 7-8
லூக்: 12: 39-48

ஒரு புகழ்பெற்ற கம்பெனியின் முக்கியமான பொறுப்பிற்கு சரியான ஒருவரைத்  தேர்ந்தெடுக்க நேர்முகத் தேர்வு நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வேலைக்கு யாருமே விண்ணப்பிக்கவில்லை. ஏனெனில் அந்த கம்பெனியின் முதல்வர் கம்பெனியில் எந்தத் தவறு நடந்தாலும் முக்கியமான அப்பொறுப்பில் உள்ளவரைத் தான் கடிந்து கொள்வார். அப்பொறுப்பாளியிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கவும் செய்வார். தவறு நடந்தால் உடனடியாக வேலை நீக்கம். இதைக் கேள்வியுற்றதால் அப்பொறுப்பிற்கு தகுதியாக படித்தவர்களும் கூட விண்ணப்பிக்கவில்லை. அவர்கள் அனைவருமே "எங்களால் முதலாளியின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாது " என்று திட்டவட்டமாகக் கூறி கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டனர்.

அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு " மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.” என்று கூறுகிறார்.  இதன் பொருளை நாம் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நம்மிடம் பொறுப்புகளை அல்லது பணிகளை ஒருவர் ஒப்படைக்கிறார் என்றால் அவர் நம்மை நம்புகிறார் என்பது பொருள். ஆம் இவரிடம் இப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் மிகச் சிறப்பாகச் செய்வார் என்ற நம்பிக்கையில் தான் நம்மிடம் பொறுப்புகள் அல்லது பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன. அவ்வாறு நம்பிக்கையோடு ஒருவர் ஒப்படைக்கும் போது அதன் கனியை அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது எதார்த்தமான ஒன்று. 
  இதை நாம் என்றுமே மனதில் கொள்ள வேண்டும்.

ஆனால் ஒப்படைத்தவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே கொண்டவர்களாய் நாம் பணிபுரியக்கூடாது. அவ்வாறு செய்யும் போது தவறுகள் உண்டாகலாம். மாறாக கடமை உணர்வோடு நம்முடைய தகுதியையும் திறமையையும் பயன்படுத்தி உழைக்கும் போது நம் பணியும் கனிதரும். நம்மிடம் பணியை ஒப்படைத்தவரும் நாம் பொறுப்புடன் செயல்படுவதை எண்ணி மகிழ்வார்.

நம்முடைய வாழ்க்கையில் சிறிய பொறுப்பாக இருந்தாலும் கடமை உணர்வோடு செய்ய முயற்சி செய்வோம். நாம் செய்கின்ற கடமைகளுக்கு ஒருபோதும் பாராட்டு கிடைக்கும் என்ற மனநிலையில் செய்யக்கூடாது. மாறாக,  இது என்னுடைய நீதி கலந்த கடமை என்ற மனநிலையில் செய்ய வேண்டும். அப்பொழுது கடவுள் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார். உழைப்பிற்கேற்ற பலனை நிறைவாக நமக்குக் கொடுப்பார். கிடைக்கின்ற ஒவ்வொரு சிறிய வாய்ப்பினையும் தவறவிடாமல் அதை பயன்படுத்தி வாழ்வில் வெற்றியாளராக மாறுவது நம் ஒவ்வொருவரின் கடமை. நம் கடமையை நாம் செய்கின்ற பொழுது இறைவன் நமக்கு மிகுதியான ஆசிர்வாதத்தை தொடர்ந்து கொடுப்பார். அத்தகைய நல்ல மனநிலையை பெற்றுக் கொள்ள முயற்சி செய்வோம்.

 இறைவேண்டல்
அன்பான ஆண்டவரே! நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள திறமைக்காகவும் ஆற்றலுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். நீர் எங்களோடு உடனிருந்து நாங்கள்  செய்கின்ற கடமைகளை சிறப்பாக செய்ய உமது அருளை தாரும்.ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்