நம்பிக்கையோடு ஆண்டவரின் இரக்கத்தை பறைசாற்றுவோமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு |Daily Reflection

பொதுக்காலம், வாரம் 4 திங்கள்
I: 2 சாமு: 15: 13-14, 30;16: 5-13
II: திபா 3: 1-2. 3-4. 5-7
III: மாற்: 5: 1-20

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காகத் தன்னையே தயாரித்துக் கொண்டிருந்தார் ஒரு மாணவி. படிப்பில் கொஞ்சம் பின் தங்கியவர்தான் . அம்மாணவியின் வீட்டில் எப்போதும் இம்மாணவியை சற்று தாழ்வாகப் பேசி, பயமுறுத்துவது வழக்கம்.மற்றவரிடமும் "இவள் எப்படி தேர்வு எழுதப் போகிறாளோ? தேர்ச்சி பெறுவாளோ?" என்று நம்பிக்கையற்ற நிலையிலேயே பேசுவர். ஒருமுறை இதையெல்லாம் கேட்டு மிகவும் மனம் கலங்கிப் போன அம்மாணவி, தன்னைப் பற்றி பேசுபவர்கள் தன்னைப் பாராட்டும் வண்ணம் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற வேண்டும் என முடிவெடுத்தார். முயற்சி எடுத்தார்.நான் வெற்றி பெறுவேன் என நம்பினார். கடவுள் தன் முயற்சிகளை ஆசிர்வதித்து வெற்றியளிப்பார் என நம்பினார்.இறுதியில் தான் நம்பியதைப் போலவே வெற்றியும் பெற்றார். ஆண்டவரின் அருளாலும் தன் முயற்சியாலும் பெற்ற வெற்றியை தன்னைத் தூற்றியவர்கள் முன் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்க வேண்டும். காற்று, நீர், உணவு,உடை,உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் போல நம்பிக்கையும் வாழ்வில் அவசியம். வாழ்வில் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கும், எடுக்கின்ற முயற்சியில் வெற்றி பெறுவதற்கும் நம்பிக்கை மிக மிகத் தேவை. மேலும் ஒருவர் கடவுளிடமும் தன்னிடமும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தீய ஆவி பிடித்த மனிதரிடமிருந்து அதை வெளியேற்றிய நிகழ்வை வாசிக்கிறோம். அவ்வாறு நலமடைந்த மனிதரிடம் அவருடைய உறவினர்களிடம் சென்று ஆண்டவரின் இரக்கமிக்க செயலை அறிவிக்க
வலியுறுத்துகிறார் இயேசு. நம் அன்றாட வாழ்வில் கடவுளிடமிருந்து பல்வேறு அருளைப் பெறுகிறோம். பல சமயங்களில் துன்பங்களுக்கு மத்தியிலும் நம்பிக்கை குன்றாமல் இறைவேண்டல் செய்து நம்முடைய தேவைகளைப் பெறுகிறோம். அது நம் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றிதான். ஆயினும் அந்த வெற்றியை, அந்த மகிழ்வை நாம் நம்முடையதாக கருதி, அத்துடன் நின்று விடுகிறோம்.அவை அனைத்தும் ஆண்டவரின் அருளிரக்கம் என்பதை மற்றவரோடு பகிரவும் பறைசாற்றவும் மறுத்துவிடுகிறோம். அத்தகைய மனநிலையைக் களைந்து நம்பிக்கையோடு நம் வாழ்வில்  கடவுளின் இரக்கத்தை அனுபவித்த நேரங்களை மற்றவரோடு பகிர்ந்து கொண்டு அவர்களையும் நம்பிக்கையில் வளரத் தூண்டுவோம்.

 இறைவேண்டல்
அன்பு இறைவா ஒவ்வொரு நாளும் உமது இரக்கத்தை அனுபவிக்கும் நாங்கள்,அவற்றை நம்பிக்கையோடு பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் இதனால் நாங்களும் பிறரும் தொடர்ந்து நம்பிக்கையில் வளரவும் அருள் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்