நற்செய்தியை வாழ்வாக்கிய ஒரு மனிதனின் பயணம் || வேரித்தாஸ் செய்திகள்

ஜே. கிளெமென்ட், வயது 54 வயதுடைய நம்பிக்கையுள்ள  கத்தோலிக்கர், இவர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இருளர் சமூகம் மற்றும் வறியவர்களுக்காக 38 இலவச வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார்.

பழங்குடியினர் (எஸ்டி) எனப்படும் இருளர் சமூகத்தினருக்கு  புதிய வீடு கட்டி உதவி வருகிறார். இதுவரையில் கும்மிடிப்பூண்டியில் 36 வீடுகளும், கேரளா மற்றும் ஆந்திராவில் இரண்டு வீடுகளும் கட்டி அதனை வீடு இல்லாத ஏழைகளுக்கு கொடுத்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளார்.

திரு. கிளமென்ட் அவர்கள்  கேரளாவின் ஆலப்பி மாவட்டம் குட்டநாடு தாலுக்காவில் உள்ள புதுக்காரி கிராமத்தைச் சேர்ந்தவர், ஆனால் 1989 இல், அவர் இந்தியாவின் தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டிக்கு தொழில் காரணமாக குடிபெயர்ந்து தற்போது அவர் தமிழ்நாட்டில்  வசித்து வருகிறார்.

இவரது அழகிய குடும்பம் இவரின் மகத்தான அன்புப்பணிக்கு ஆதரவும் , ஊக்கமும் கொடுத்து வருகின்றனர்.இவரது மனைவி சிந்து, அவரது இரண்டு மகன்கள், எபின் மற்றும் ஃபெபின் மற்றும் அவரது மகள் ஜெஃபின். கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்று அவர் நம்புகிறார் அதனை தனது குடும்பத்தினருக்கும் கற்றுத்தந்து ஒரு எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்து வருகிறார்.

"கடவுளால் நேரடியாக உதவ முடியாது என்று அவர் உறுதியாக நம்புகிறார், எனவே அவர் ஒருவரையொருவர் உதவவும் நேசிக்கவும் மனிதர்களைப் படைத்தார், கடவுள் எனக்கு அந்த பாக்கியத்தை கொடுத்துள்ளார் எனவே நான் தேவையில் இருப்போர் அனைவருக்கும் , ஏழைகளுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன், செய்து  கொண்டே இருப்பேன். தேவைப்படும் அனைவருக்கும் நற்செய்தி விழுமியங்களை வழங்குவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்," என்று அவர் RVA விடம் கூறினார். .

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கடந்த 2010-ம் ஆண்டு பார்வையற்றவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஆலமரத்தடியில் வசித்து வந்ததை பார்த்தேன். அந்த முதியவருக்கு சொந்தமாக நிலம் இருந்தாலும், அதில் வீடு கட்ட பணம் இல்லை. இந்த முதியவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவ நினைத்து எனது முதல் இலவச வீட்டை தமிழ்நாட்டின் கும்மிடிப்பூண்டி சிறுபுழல்பேட்டை கிராமத்தில் இருந்து துவங்கினேன்.

2010 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாட்டில் இருளர் சமூகத்தினருக்கு 38 க்கும் மேற்பட்ட இலவச புதிய வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். மேலும் அவர் இந்த பணியை கேரளா மற்றும் ஆந்திராவிற்கும் விரிவுபடுத்தியுள்ளார்.

ஏழை, எளிய மக்களுக்கு குறைந்தபட்சம் 100 இலவச வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பது அவரது கனவு.

ஓசூர் மறைமாவட்ட ஆயர் செபாஸ்டியன் பொழேலி பெரம்பில் தனது 34வது இலவச இல்லத்தை ஏழை எளிய மக்களுக்காக திறந்து வைத்து பேசும்போது இவர்  வைராக்கியம், நீதி மற்றும் அன்பு நிறைந்த மனிதர் என்று பாராட்டினார். அவரது பணியைப் பாராட்டி, "இதயம் உள்ள அனைவரும் ஏழைகளையும்  நேசிப்பதில்லை, கிறிஸ்துவின் அன்பை அனுபவித்தவர்களால் மட்டுமே அதை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும். கிளமென்ட் கிறிஸ்துவின் அன்பை ஏராளமாக அனுபவித்திருக்கிறார், மேலும் நான் அவருக்கு இறைவன் நிறைவாக ஆசீர்வாதங்களை வழங்கி இன்னும் அதிகமாக சேவை செய்திட வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.

உலகமே கொரோனா என்ற பெரும் தொற்றில் இருந்தபோது பணம் கொடுத்தால் மட்டுமே ஆக்ஸிஜன் கிடைக்கும் என்ற நிலையில் ஏப்ரல் 29, 2020 அன்று, ஏழை மற்றும் தேவைப்படும் COVID-19 நோயாளிகளுக்கு 7,000 கன லிட்டருக்கும்  அதிகமான மருத்துவ ஆக்சிஜனை நன்கொடையாக வழங்கினார்.

கூடுதலாக, அவர் 600 ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் பிற அத்யாவசிய பொருட்களையும் ரூ.10,00,000.00 மதிப்புள்ள மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களையும் தமிழக அரசுக்கு வழங்கினார்.

கோவிட்-19 சமயத்தில் கும்மிடிப்பூண்டியில் பல கோவிட்-19 தடுப்பூசி முகாம்களையும் அவர் ஏற்பாடு செய்தார்.

 ஒவ்வொரு  வருடமும் இவரது மனிதாபிமான சேவையின் ஒரு பகுதியாக  ஏழை குழந்தைகளின் கல்வி, புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களுக்கும் அவர்களது பள்ளி கல்வி கட்டணத்தையும் இவரே செலுத்துகிறார், மேலும் கொரோனா பெரும் தொற்றுநோய்களின் போது  குழந்தைகளுக்கு ஆன்லைன் வழியாக கல்வி கற்க முடியாத பல குழந்தைகளுக்கு அவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்களை வழங்கி பல நூறு குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார்.

மேலும், ஆண்டுதோறும் மருத்துவமனைக்குச் செல்ல பணமின்றி அவதிப்படும் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களையும்  ஏற்பாடு செய்து ஏழைகளின் ஆரோக்கியத்திற்கும் சிறப்பான சேவையாற்றி வருகிறார்.

2020 ஆம் ஆண்டில், திரு. ஜே .கிளமெண்ட் அவர்கள்  கேரள அமைச்சர் ஏ.கே.பாலன் மற்றும் தமிழக அமைச்சர் கே. பாண்டியராஜன் ஆகியோரிடமிருந்து "சிறந்த சமூக சேவைக்கான விருதை" இரண்டு மாநிலங்களில் இருந்தும் பெற்றார்.

2021ல் இவரது சிறந்த மனிதாபிமான சமூக சேவைகளை  பாராட்டுகளை திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெற்றார். 

பின்னர் சென்னை திரும்பிய அவர் தற்போது கும்மிடிப்பூண்டியில் பரத் ஆக்சிஜன் உரிமம் பெற்ற (மருத்துவ மற்றும் தொழிற்சாலை எரிவாயு பிரிவு) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராமு கூறுகையில், 35 ஆண்டுகளாக ராமபுரம் கிராமத்தில் தங்கி இருந்தும், அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆனால், அய்யா, அம்மா, எங்கள் கிராமத்திற்கு வந்து நாங்கள் உங்களுக்கு உதவட்டுமா என்று எங்களிடம் கேட்டார்கள்.  அந்த கேள்வி கடவுள் எங்களிடம் கேட்பது போலவும் எங்கள் குரலுக்கு கடவுள் செவி சாய்த்து விட்டார் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

மேலும் அய்யா கிளமென்ட், இங்கு எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன என்று கேட்டதற்கு, இங்கு 19 குடும்பங்கள் தங்கியிருப்பதாக பதில் அளித்தேன், அதைப்பற்றி கவலைப்படாமல், இயற்கை சீற்றங்களில் இருந்து உங்கள் குடும்பத்தை காக்க உங்கள் அனைவருக்கும் வீடு கட்டி தருவேன் என்று வாக்குறுதி கொடுத்து எங்கள் அனைவருக்கும் வீடு கட்டி தந்து எங்கள் வாழ்வில் எங்கள் கனவை நிறைவேற்றியவர் எங்கள் கனவின் நாயகன் என்று இப்பொது அந்த முழு கிராமமும் இவரது பெயரை உச்சரித்து வருகிறது.

COVID-19 இன் போது 10 கிலோ அரிசி, 1 லிட்டர் எண்ணெய் மற்றும் பிற மளிகைப் பொருட்களை வழங்கியதன்  மூலம் அவர் 600 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் இந்த சேவை தொடர ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி சார்பாக வாழ்த்துக்கள் .


_அருள்பணி வி.ஜான்சன் SdC

https://www.rvasia.org/saints-next-door/indian-catholic-construct-38-homes-destitute