மன்னிப்பது உதட்டளவில் அல்ல, உள்ளத்தளவில்! | ஆர்.கே. சாமி | VeriatsTamil

18 மார்ச்  2024                                                                                           தவக்காலம் 5ஆம் வாரம் - திங்கள்
தானியேல் (இ) 2: 1-9, 15-17, 19-30, 33-62                                                                                           யோவான்   8: 1-11

மன்னிப்பது உதட்டளவில் அல்ல, உள்ளத்தளவில்!
 

முதல் வாசகம் :

சூசன்னா என்ற பெண்மணி மற்ற யூதர்களுடன்  நாடுகடத்தப்பட்டு  பாபிலோனில் உள்ளார். அவள்  ஆண்டவருக்கு அஞ்சி,  யூத ஒழுக்கத்தின்படி அப்பழுக்கற்றவராய் வாழ்ந்துவந்த ஒரு பேரழகி. அவளது கணவன் யோவாக்கிம் என்ற ஒரு செல்வர். அவரது பேரழகில்் மயங்கிய முதிய நீதிபதிகள்  இருவர் அவள் மேல் காமுற்று அவளை அடைய முயன்றனர். அது நிறைவேறாததால் அவள் மீது பொய்க் குற்றம் சுமத்தி, மரண தீர்ப்பிட்டு, கொலை களத்திற்கு அவளை இழுத்துச் சென்றார்கள்.   ஆனால், சூசன்னா கடவுளிடம் தன்னை காக்க மன்றாடிய வேளை,  ஆண்டவர்  தானியேல் என்ற ஓர இளைஞன்  வழியாக அவருக்கு முறையான தீர்ப்பு வழங்கி, அவரைச் சாவின் பிடியிலிருந்து விடுவித்தார் என்பது இன்றைய முதல் வாசகத்திற்கான பின்புலம்.

 
1.சதித்திட்டம்  

இரண்டு ஊழல் நீதிபதிகள் சூசன்னா மீது  பொய் குற்றச்சாட்டை சுமத்தி பழிவாங்க முயற்சித்ததை  மையமாகக் கொண்ட நிகழ்வு இது.   அவர்கள் அவளை மறைமுகமாக மிரட்டி அவர்களின் காமப் பசிக்கு அடிபணிய (பிளாக்மெயில்)  செய்கிறார்கள்.   அவர்களது விருப்பத்திற்கு இணங்காவிட்டால்  அவள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாக மிரட்டுகிறார்கள். அவள் எதிர்கொண்ட  கடுமையான தண்டனையின்  போதிலும், சூசன்னா நீதிக்கான தனது அர்ப்பணிப்பில் உறுதியாக இருக்கிறார் மற்றும் பாவம் செய்ய மறுக்கிறார்.
 
4  இறைவேண்டலும் இறைவனின் தலையீடும் 

பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனையை எதிர்கொள்ளும் போது சூசன்னா இறைவேண்டலில் கடவுளிடம் திரும்புகிறார். அவள் சார்பாக தானியேலை இறைவன் பயன்படுத்துகிறார்.  கடவுளுடைய நீதியில் அவளுடைய நம்பிக்கைக்கு  வெகுமதி பெறுகிறாள்.  

5.தானியேலின் பங்கு:    

ஞானத்திற்கும் நீதிக்கும் பெயர் பெற்ற தானியேல், சூசன்னாவைப் பாதுகாக்கவும் இரண்டு நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்தவும் கடவுளால் அனுப்பப்பட்டார். அவரது தலையீடு சூசன்னாவுக்கு நீதி கிடைக்கவும்  குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் வழிவகுக்கிறது.


நற்செய்தி :


நற்செய்தியில், மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் கையும் களவுமாகச்  சிக்கிய ஒரு பெண்ணை இயேசுவிடம் கொண்டு வந்து, அவரை சிக்க வைக்கும் நோக்கத்தில் அவரிடம் அவளை ஒப்புவித்து, அவளுக்கு வழங்கக் கூடிய தண்டனை குறித்து வினவுகிறார்கள். 

 அவர்கள் யூத சட்டத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். அச்சட்டமோ  அத்தகைய குற்றங்களுக்கு கல்லெறிவதை பரிந்துரைக்கிறது. இச்சட்டமானது  அவர்கள்  நன்கு அறிந்த ஒன்று.  அவகளோ  இயேசுவிடம் அவருடைய தீர்ப்பைக் கேட்கிறார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் அந்தப் பெண்ணைக் கண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களுள்   பாவம் செய்யாதவரை  முதல் கல்லை எறியும்படி சவால் விடுகிறார். அவரது சவாலை ஏற்கத் தயங்கி,  முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக  யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். 

இயேசு  அந்த பெண்ணைக் கண்டிக்காமல்,  அவளிடம்   ‘‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார். 

 
சிந்தனைக்கு :


இன்றைய இரு வாசகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஓரிரு ஒற்றுமைகளும்  வேற்றுமைகளும் உள்ளதைக் காண முடிகிறது. முதல் வாசகத்திலும்  நற்செய்தியிலும்  இரு வெவ்வேறு  பெண்கள் விபச்சாரம் செய்ததாக குற்றம் சாற்றப்படுகிறார்கள்.   இரண்டு நிகழ்வுகளிலும், சில தலைவர்கள் குற்றம் சாற்றப்பட்ட பெண்ணைக் கடுமையாகக் கண்டிக்க  முயல்கிறார்கள். ஆனால்,  இரண்டு வழக்குகளிலும், இரு பெண்களும்  இறுதியாக விடுவிக்கப்படுகிறார்கள். 

இரண்டு வாசகங்களில் வரும் பெண்களுக்கு இடையே வேற்றுமையும் உண்டு. முதல் வழக்கில், சூசன்னா என்ற பெண் குற்றவாளி என்று தவறாக குற்றம் சாற்றப்படுகிறாள். அங்கே பொய் குற்றச்சாட்டு அரங்கேறுகிறது.   அந்தப் பொய் குற்றச்சாட்டு.  பழிவாங்கும் நோக்கம் கொண்டது.   இரண்டாவது வழக்கில், குற்றம் சாற்றப்பட்ட பெண் உண்மையிலேயே விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி.  யூதர்களின் சட்டப்படி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டியவள். 
 
முதல் வாசகத்தில் விசாரித்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதிகள் தவறிழைத்தார்கள்.  அங்கே உண்மை விலைபோனது.  பணம் மற்றும் பதவி பலத்தின் முன் உண்மை மண்டியிட்டது. வேலியே பயிரை மேய்ந்தக் கதையானது.  

நற்செய்தியில்  குற்றம்சாற்றப்பட்ட பெண்  விபச்சாரத்தில் ஈடுபட்டதற்கான காரணம் யாருக்கும் தெரியாது. அவளது வறுமை ஒரு காரணமாகவும் இருந்திருக்கலாம். ஆனாலும் இரு பெண்கள் மீதும் குற்றம் சாற்றவும் தீர்ப்பிடவும் தயங்காத கல் நெஞ்சத்தார் முன், இருவரும் வாயில்லாப் பூச்சிகளாகத்தான்  நின்றார்கள். அவர்களுக்கு உதவக்கூடியவர் கடவுள் ஒருவரே. 

நன்கு கவனித்தால், விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைத் தண்டிக்காமல் இயேசு விடுவித்தது நமக்கு தவறு என்றும் தோன்றலாம். இயேசு அவளது குற்றத்தை நியாயப்படுத்தினாரா? என்றும் கேட்கத்தோன்றும். திருச்சட்டத்தின் படி அவள்  செய்தது குற்றம்தான். ஆனால், இயேசுவின் பார்வையில் திருச்சட்டத்தின் முன் மனிதநேயம் மேலானதாக இருந்தது. மேலும் குற்றம் சாற்றியவர்களில் யாரும் நீதிமான்களும் கிடையாது. 

நிறைவாக, நம் கடவுள் பாவத்தைதான்  வெறுக்கிறார், பாவிகளை அல்ல.  இந்த உண்மையை நமக்கு இயேசு இன்றைய நற்செய்தியின் வழி தெளிவுப்படுத்துகிறார். ஒரு விரல் நீட்டி பிறரை குற்றவாளிகள் என்று தீர்ப்பிடும் போது மற்ற மூன்று விரல்களும் நாமும் பாவிகள்தான் என்பதைச் சுட்டுக்காட்டுகின்றன என்பதை மனதில் கொள்வோம். குற்றவாளிகள் திருந்தவும்    வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு,  நிரபராதிகள் விடுவிக்கப்படவும் நாம்  குரல் கொடுக்க வேண்டும். 

நமது பாவங்களையெல்லாம் தம் மேல் சுமந்து, நமக்கு இந்தப் பெரிய மன்னிப்பைப் பெற்றுத்தந்தவர்தான் இயேசு என்பதை இந்த தவக்காலத்தில் மனதில் கொண்டு, பிறருக்கு நாம் கொடுக்கும் மன்னிப்பு உதட்டளவிலானதா? அல்லது உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுகிறதா? என்பதை சிந்தித்து, அவரை நாடி செல்வோம்.    


இறைவேண்டல் :

பாவிகளை மனமுவந்து மன்னிக்கும் ஆண்டவரே, நீர் என்னில் காட்டிய அன்பையும் மன்னிப்பையும் பிறரிடம் காட்ட முடியாமல் இருந்ததற்கு என்னை மன்னித்தருளும். பிறரை மன்னிக்கும் மாண்பை எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452