கடவுளின் பரிவன்பை சுவைக்கத் தயாரா! | பொதுக்காலம் 15 வாரம் வியாழன் | Daily Reflection

பொதுக்காலம் 15 வாரம் வியாழன் 
I: விப: 3: 13-20
II: திபா: 105: 1,5. 8-9. 24-25. 26-27
III: மத்: 11: 28-30

கடவுள் நமக்கு பரிவை  வழங்குபவராக இருக்கின்றார். இவ்வுலகத்தில் வாழும் நாம் அனைவரும் கடவுளின் பரிவை அனுபவிக்க ஆசைப்படுகிறோம். ஆனால் அவற்றை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. காரணம் கடவுள் நம்முடைய சுமைகளைத் தாங்க வந்தவர். நம்முடைய சுமைகளை முற்றிலும் அகற்றுவார் என்ற நம்பிக்கை இல்லாததே ஆகும்.  எனவே நம் ஆண்டவர் இயேசு சுமைகள் அனைத்தையும் போக்கி சுகமான வாழ்வை வழங்க நம்மையே  முழுமையாக அவரிடம் ஒப்படைக்க இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

இன்றைய நற்செய்தியின் வழியாக ஆண்டவர் இயேசு நம்மை திடப்படுத்தும் இறைவனாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது. நம் சுமைகளை."பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று ஆண்டவர் இயேசு தம் உள்ளத்தைத் திறக்கிறார். 

இந்த நம்பிக்கை தரும் வார்த்தைகள் நமக்கு தரும் செய்தி என்ன?  என்று இன்றைய நாளில்  சிந்திக்க அழைக்கப்படுகிறோம். பெரும்பாலாக சுமைகளை அதிகம் அனுபவிப்பவர்கள் எளிய மக்கள். கடவுள் எளிய மக்களின் சார்பாக இருக்கின்றார் என்பதற்கு இவ்வார்த்தைகள் மிகச் சிறந்த உதாரணம். எளிய  உள்ளதோடு கடவுளை   ஏற்றுக் கொள்ளும் பொழுது,  கடவுள் தரும் அன்பையும் அருளையும் அமைதியையும் நிறைவாக நாம் பெற முடியும்.  

கடவுள் சுமைகளை தாங்குபவராக இருக்கின்றார். சுமைகளை தாங்குதல் என்பது தாயின் அன்பை சுட்டிக்காட்டுகிறது. ஒரு குழந்தையை பெற்றெடுக்க தாய் பத்து மாதங்கள் கருவிலேயே குழந்தையை சுமக்கிறார். அது சுமையாக இருந்தாலும் அந்தத் தாய் அதை சுகமானதாக ஏற்றுக் கொள்கிறார். கடவுளும் தன்னுடைய தாய் அன்பை நம்முடைய சுமைகளை ஏற்றுக்கொண்டு சுகமான வாழ்வை கொடுப்பதன்  வழியாக வெளிப்படுத்துகிறார்.  எனவே அதற்கு நம்மையே முழுமையாக கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும். அப்பொழுது கடவுள் தரும் உண்மையான அன்பையும் இரக்கத்தையும் சுகமான வாழ்வையும் பெற்றுக்கொள்ள முடியும்.   நம்முடைய அன்றாட வாழ்விலும் பிறர் துன்பப்படுகின்ற பொழுது, அவர்களின் சுமைகளைக் கண்டு நகைக்காமல் அவர்கள் வாழ்வு சுகமாக மாற வழிகாட்டுவோம்.

இன்றைய நற்செய்தியில் கடவுளின் மேலான இரக்கம் வெளிப்படுகின்றது. கடவுள் தன்னுடைய இரக்கத்தைப் பொழிந்து புதுவாழ்வு வழங்க இதயத்தைத் திறந்து காட்டியுள்ளார். அதேபோல முதல் வாசகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தம் மக்களை எகிப்தியரியின் அடிமைத்தனத்திலிருந்து மீட்க மோசேயை அனுப்பும் நிகழ்வையும் நாம் இன்று தியானிக்கிறோம். அப்படிப்பட்ட கடவுளின் பிள்ளைகளாகிய நாம் கடவுளின் பரிவை நிறைவாக அனுபவிக்க கடவுளின் மனநிலையில் வாழ முயற்சி செய்வோம்.

அன்றாட வாழ்வில் எளிய உள்ளத்தோடு வாழந்து பிறர் நலத்தோடு எளிய மக்களுக்கு வாழ்வளிக்க முயற்சி செய்வோம். துன்பப்படுகிறவர்களின் சுமைகளை குறைக்க நாம் ஒரு கருவியாக பயன்படுவோம். கடவுள் நம்மை இரக்கத்தோடு அன்பு செய்வது போல நாமும் இரக்கத்தோடு பிறரை அன்பு செய்வோம். இவை மூன்றையும் நாம் செய்யும் பொழுது கடவுளின் பரிவை  நாமும் பெற முடியும். பிறரும் பெறுவதற்கு ஒரு கருவியாக மாறமுடியும்.  கடவுளின் பரிவை பெறவேண்டுமா?  சிந்திப்போம். செயல்படுவோம்.

இறைவேண்டல் :
அன்பின் ஆண்டவரே! பரிவுள்ளவராக  நீர் இருப்பது போல நாங்களும் பரிவுள்ளவர்களாக வாழத் தேவையான அருளைத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்