இறையரசை எளிமையாய் புரிந்து கொண்டு புரியவைப்போமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலத்தின்  16 ஆம் வியாழன்
I: விப: 19: 1-2, 9-11, 16-20
II: தானி(இ) 1: 29ய,29உ. 30,31. 32,33
III: மத்: 13: 10-17

நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு நண்பர் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற மிகவும் கடினப்பட்டார். மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றார். ஆங்கில மொழிப்பாடம் மட்டும் சற்று  அவருக்கு கடினமாக  இருந்தது. பேராசிரியர்கள் நடத்திய பாடங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இறுதியில் அந்த நண்பர் என்னிடம் வந்தார். நான் ஆங்கில மொழி பாடத்தில் தேர்ச்சி பெற உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். உடனே அந்த நண்பருக்கு புரியாத ஆங்கில இலக்கணத்தை மிகவும் எளிமையாக புரிய வைத்தேன். இறுதியில் ஆங்கில தேர்வில் வெற்றிபெற்று, இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு இளங்கலை பட்டத்திற்கான சான்றிதழை என்னிடம் கொடுத்து, "இது உன்னால் தான் கிடைத்தது" என்று கூறினார். அப்பொழுது நான், "இந்த வெற்றியானது உம்முடைய ஆர்வத்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தாலும் திறந்த மனதோடு இருந்ததாலும் மட்டுமே கிடைத்தது" என்று கூறினேன். அப்பொழுது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். வெற்றிபெற்ற மனநிலையோடுவிடைபெற்றுச் சென்றார். இப்பொழுது அந்த நண்பர் நல்ல வேலை கிடைத்து பணிபுரிந்து வருகிறார்.

இந்த உண்மை நிகழ்வு படிப்பு ,வேலை போன்றவை மட்டுமல்ல வாழ்வின் அர்த்தங்களைக்கூட புரியாதவர்களுக்கும் புரியவைத்து, அவர்களின் வாழ்வில் வெற்றியடைய நாம்  வழிகாட்ட வேண்டும் என்ற சிந்தனையைக் கொடுப்பதாக இருக்கின்றது. வாய்ப்பு கிடைக்காத பொழுதும் வாய்ப்பு கிடைக்கின்ற பொழுதும் அவற்றைத் தேடிச் சென்று பயன்படுத்தி வாழ்வில் வெற்றி அடைய அழைப்பு விடுப்பதாகவும் இன்றைய வாசகங்கள் இருக்கின்றன. "இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு" (2 திமோ. 4:2) என்று பவுல் கூறுகிறார். 

இயேசு தன் இறையாட்சிப் பணியில் கற்றறிந்த மேதைகளுக்கு எதையும் விளக்கவில்லை. மாறாக புரிந்து கொள்ள இயலாமல்  அறியாமையில் இருக்கக்கூடிய பாமரர்களைப் புரியச் செய்து ஒளியின் பாதைக்குஅழைத்துச் சென்றார்.
உவமைகளின் வழியாக புரிய முடியாத இறையாட்சி மறையுண்மைகளை படித்தவர் முதல் பாமரர்கள் வரை புரிந்து கொள்ளும் வகையில்  புரிய வைத்துள்ளார். இது இயேசு எந்த அளவிற்கு வாழ்வின் எதார்த்தங்களோடு ஒன்றித்து தன்னிலையிலிருந்து இறங்கி எளியமுறையில்  கற்றுக்கொடுத்தார் என்பதைச்  சுட்டிக்காட்டுகிறது.

சீடர்கள் இயேசுவிடம், "ஏன் அவர்களோடு (மக்களோடு) உவமைகள் வழியாகப் பேசுகிறீர்?" என்று கேட்டார்கள். இதன் பின்னணி என்னவென்றால் இயேசு பெரும்பாலும் தன்னுடைய போதனைகளில் மிக எளிமையான உவமைகளைத் தான் போதித்தார். எனவேதான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மறுமொழியாக, "விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை" (மத். 13:11) என்று கூறினார். 

இறையாட்சியின் (விண்ணரசு) மறைபொருள் என்பது அறிவுப் பூர்வமாக அறிந்து கொள்வதன்று; மாறாக, அனுபவத்தின் வழியாக புரிந்துக் கொள்வது. அந்த அனுபவத்தைப் படிக்காத பாமரர்கள் புரிந்துகொள்வது சற்று கடினம் என்பதை இயேசு உணர்ந்திருந்தார். எனவே அந்த அனுபவத்தைகக் கொடுப்பதற்காகத்தான் இயேசு உவமைகள் வழியாக போதித்தார். அதுவும் அவர்கள் அன்றாட வாழ்வில் கண்ட மரம், செடி, கொடி, வலை, முத்து, விதை இது போன்றவைகளின் வழியாகத்தான் ஆண்டவர் இயேசு உவமைகளைக் கூறியுள்ளார். இறையாட்சி பற்றிய மறைபொருளை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு இயேசு உவமைகள் வழியாக போதித்தது புரியாததை புரிய வைப்பதற்காகவே.

புரியாத மறை பொருளாகிய இறைவன் என்ற இறையாட்சியை நம்முடைய திறந்த உள்ளத்தோடு ஏற்றுக் கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அப்பொழுதுதான் இறையாட்சியின் மறைபொருளை அனுபவத்தின் வாயிலாக புரிந்து கொள்ளமுடியும்.இந்த அனுபவமே "வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது." (தி.பா. 36:9) என்ற திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகளுக்கேற்ப வாழ்வுதரும் ஊற்றாகிய மீட்பை சுவைக்க நமக்கு உதவும்.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே எத்தனையோ நபர்கள் புரிய முடியாத மந்த நிலையில் இருப்பதைக் காண்கிறோம்.  அவர்களுக்கு நாம் அறிந்ததை  புரியாத வகையில் சொல்லாமல் இயேசுவைப்போல புரியும் வகையில் எளிமையாக எதார்த்தத்தோடு கற்றுக்கொடுக்க  அழைக்கப்பட்டுள்ளோம். அதே போல வாழ்வின் எதார்த்தங்களை நாம் புரிந்து கொள்ளாமலும் இறைச்செய்தியை அறிந்து கொள்ளாமலும் நாம் திகைக்கும் தருணங்களில் இயேசுவைப் போல நம்மை வழிநடத்தும் ஆன்மீக வழிகாட்டிகளையும் நாம் அணுகிச் செல்ல கற்றுக்கொள்ளவேண்டும். யாருக்கும் ஏன் மீட்பரைக் காணவும் அவர் மொழிகளைக்  கேட்கவும் காத்திருந்த இறைவாக்கினர்களுக்குக் கூட கிடைக்கப்பெறாத   வாய்ப்பு சாதாரண எளிய மக்களுக்குக் கிடைத்துள்ளதை இயேசு சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாய்ப்பு இறைவார்த்தை மற்றும் அருட்சாதன வடிவில் நமக்கும் கிடைத்துள்ளது. அதை சிறப்பாகப் பயன்படுத்தி இறையாட்சிக்குள் நுழைய வழிகாட்டுதலைப் பெறுவோம். பிறரையும் வழிநடத்த வரம் வேண்டுவோம்.
 
இறைவேண்டல்
எளியோரின் இறைவா!  நாங்கள் பல சமயங்களில்  இந்த உலகத்தில் என்ன நடக்கின்றது என்று கூடத் தெரியாமல்,வாழ்வின் எதார்த்தங்கள் வழி நீர் தரும் இறையாட்சி செய்திகளை புரிந்து கொள்ளாமல் அறியாமையில் வாழ்கின்றோம். எங்களை நீர் வழிநடத்தும். அவ்வனுபவத்தை எளியமுறையிலும் புரிந்து கொள்ளும் வகையிலும் பிறரோடு இயேசுவைப் போல பகிர்ந்து வாழும் மனம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்