உள்ளவர்களா நாம்? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 25 ஆம் திங்கள்
I: எஸ்: 1: 1-6
II: திபா: 126: 1-2. 2-3. 4-5. 6
III: லூக்: 8: 16-18

உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும்.” என்ற வார்த்தைகளை இன்று நற்செய்தியில் கூறுகிறார் நம் ஆண்டவர் இயேசு. இவ்வார்த்தைகள் நமக்குக் கூறும் வாழ்வியல் பாடத்தை நாம் இன்று ஆழமாக அலசிப்பார்ப்போம். 

முதலாவதாக " உள்ளவர் " என்ற வார்த்தை குறிப்பிடுவது எதை?  உள்ளவர் என்று சொன்னால் பணத்தையோ, உடமைகளையோ கொண்டுள்ள உரிமையாளர் என்பது நமது கணிப்பு. அது உலகப்பார்வையில் உண்மையாகத் தென்படலாம். ஆனால் இயேசுவின் பார்வையில் இந்த வார்த்தைக்கு வேறு பொருள் உண்டு. இயேசு குறிப்பிட்ட உள்ளவர் என்பவர் அன்புள்ளவர், நல்ல பண்புகளையுடையவர், இருப்பதை பிறருக்குக் கொடுக்கும் மனதுடையவர் இவ்வாறாக அடுக்கிக்கொண்டே போகலாம்.  மத்தேயுவின் மலைப்பொழிவில் "இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" என்று இயேசு கூறுகிறார்.இவ்வார்த்தைகள் உள்ளவருக்குக் கொடுக்கப்படும் என்ற வார்த்தைகளை ஒத்ததாக இருப்பதை நம்மால் உணரமுடிகிறது அல்லவா. 

"இல்லாதவர் யார்?" எல்லாம் தம்மிடம் இருந்தும் அதைப் பயன்படுத்தவோ அல்லது பகிரவோ  மனமில்லாதவரே "இல்லாதவர் ". அவரிடம் அன்பு செய்யும் மனமிருப்பதில்லை. மன்னிக்கும் குணமிருப்பதில்லை. பிறருக்கு கொடுத்து உதவும் மனமும் இருப்பதில்லை. அப்படிப்பட்டவருக்கு  நல்ல நட்போ, சொந்தங்களோ,நற்பெயரோ, மரியாதோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போய்விடும். இதுதான் உள்ளதும் என்பதன் பொருள். 

எனவே  நாம் பிறருக்கு அன்பையும், மன்னிப்பையும், தேவையான நேரத்தில் உதவிக்கரமும் கொடுக்கின்ற போது அவையனைத்தும் நமக்கு மீண்டுமாகக் கிடைக்கும். எனவே இயேசு கூறியதைப்போல நாம் " உள்ளவர்களாக " இருக்க முயற்சி செய்ய வேண்டும். நமமிடம் உள்ளவை அதிகரிக்கும் போது அதைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் நம்மிடம் அதிகரிக்க வேண்டும். விளக்குத் தண்டின் மேல் உள்ள விளக்கு பலருக்கு ஒளிபடுப்பதைப்போல நம்மிடம் உள்ளவற்றை பிறருக்கு அளித்து அவற்றைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்.இதற்கான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் 
அன்பு ஆண்டவரே இயேசுவே!  உள்ளதையெல்லாம் கொடுத்தவர் நீர். ஆகவே இவ்வுலகமே உம்மிடம் பணிந்தது. நாங்களும் எம்மிடம் உள்ளவற்றை பயன்படுத்தி பகிர்ந்தளித்து உம்மருளை மேலும் மேலும் நிறைவாகப் பெற வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Daily Program

Livesteam thumbnail