வேரித்தாஸ் செய்திகள் || Veritas Tamil News || 15.04.2024

தலைப்பு செய்திகள் 

  1. நம் இதயங்களை வியப்பில் ஆழ்த்தும் இறைவன் என்று உறைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்.
  2. பாதுகாப்பாக மற்றும் அமைதியாக வாழ்வது மக்கள் அனைவரின் உரிமை என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்.
  3. வறுமை, புலம்பெயர்ந்தோர் அடிப்படை நலவாழ்வுக்கான அணுகுமுறையின்மை போன்றவற்றில் கவனம் செலுத்த இந்திய கர்தினால் அழைப்பு.
  4. போரினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என தெரிவித்துள்ள யுனிசெஃப் அமைப்பு.

 

  • நமது வாழ்க்கையை முன்னேற்ற உதவிய நல்உணர்வுகள் மற்றும் அனுபவங்களை நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு நாம் பகிரும்போது இயேசு நமது இதயங்களை வியப்பில் ஆழ்த்துகின்றார், நாம் வாழ்கின்ற சூழலை இன்னும் அழகாக மாற்றுகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஏப்ரல் 14 பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்தத் திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

எம்மாவூஸிலிருந்து திரும்பி வந்த சீடர்கள் இருவரும் இயேசுவை சந்தித்ததை பிற சீடர்களிடம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் தோன்றினார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், சீடர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதன் வழியாக நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார்கள் என்றும் கூறினார்.

உயிர்த்த இயேசுவின் மீதான நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கின்றது என்றும் இயேசு உயிர்த்த அந்த உயிர்ப்பின் மாலை வேளைக்கு நம்மை இந்த நற்செய்திப் பகுதி அழைத்துச்செல்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

 

பல வதந்திகள், பயனற்ற செய்திகள், மேலோட்டமானவைகள் என தீமையை விளைவிக்கக்கூடிய பல ஆயிரம் செய்திகள் ஒவ்வொரு நாளும் நம்மை வந்தடைகின்றன, அதே நேரத்தில் நல்ல செய்திகளும் நம்மை வந்தைடகின்றன என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நல்லதை, நம் வாழ்க்கையைத் தொட்ட உண்மைகளை மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

  • மத்திய கிழக்குப் பகுதிகளை வன்முறைச் சூழலுக்குத் தூண்டும் செயலை நிறுத்தவேண்டும் என்றும், அனைத்து நாடுகளும் இஸ்ரயேல் மற்றும் பாலஸ்தீனம் இரண்டு நாட்டு மக்களும் அருகருகே அமைதியுடன் வாழ உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதுகாப்பாக,அமைதியாக வாழ்வது மக்கள் அனைவரின் உரிமை என்றும் எடுத்துரைத்தார்.

 

காசாவில் விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட உறுதியான பேச்சுவார்த்தைக்கான பாதைகளைப் பின்பற்றுவோம் என்றும், போரினால் பாதிக்கப்பட்டு மனிதாபிமான பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவிகள் கிடைக்கப்பெறவும், பிணையக்கைதிகள் விடுவிக்கப்படவும் செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.அமைதிக்காக செபிப்போம், வன்முறைக்கு வேண்டாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு ஆம் என்றும் பதிலளிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், துன்புறும் மக்கள் அனைவருக்காகவும் செபிக்கக் கேட்டுக்கொண்டார்.

 

"எதிர்காலத்திற்கான கேள்வி – ஏமாற்றம் மற்றும் விருப்பத்திற்கு இடையிலான இளையோர்" என்ற கருப்பொருளில் தனது நூறாவது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் இத்தாலியின் திருஇருதயக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தினரை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இளையோர் மற்றும் சமூகத்தேவைகளில் கவனத்தைச் செலுத்தி தங்களது கல்விச்சேவையைத் தொடர அவர்களை ஊக்குவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

  • விசுவாசக் கோட்பாட்டுத்துறையால் கடந்த ஏப்ரல் 8 அன்று  வெளியிடப்பட்ட மனித மாண்பு குறித்த திரு அவைக் கோட்பாடு குறித்து ஊடகங்களின் பார்வை மற்றும் அதைத் தாண்டி எழுந்திருக்கும் சவால்கள் குறித்து Asia News  செய்தி முகமையுடன் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்ட மேதகு கர்தினால் அந்தோனி பூலா அவர்கள், ஏழைகளைப் பற்றி விவரிக்கும் இக்கோட்பாட்டின் கருத்துக்களைப் புறக்கணிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

 

உலகளாவிய ஊடகங்களும், இந்திய செய்தித்தாள்களும் பெரும்பாலும் இவ்விசுவாசக்கோட்பாடு தெளிவுபடுத்தும் உயிர் நெறியியல் சார்ந்த சிக்கல்களான 'கருக்கலைப்பு, வாடகைத் தாய் முறை, மற்றும் பாலினக் கோட்பாடு' போன்றவற்றில்  மட்டும்  கவனம் செலுத்தாமல், இக்கோட்பாடு ஆழமாகச் சிந்திக்கும்  'வறுமை, வன்முறை,  புலம்பெயர்ந்தோர், சுரண்டல்கள், பாகுபாடுகள், அடிப்படை நலவாழ்வுக்கான அணுகுமுறையின்மை போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார் கர்தினால் பூலா.நாடு முழுவதும் பலர் சந்தேகத்திற்கு இடமின்றி இச்சூழலால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்திய கர்தினால், மனித மாண்பைக் குறித்து விளக்கும் இந்த விசுவாசக்கோட்பாடு, இந்தியாவில் பலர் மனித மாண்பிழந்த நிலையில் வாழ்வதற்கு காரணமாக இருக்கும் சமூக, கலாச்சார மற்றும் மதம் சார்ந்த சிந்தனை முறைகளை எதிர்கொள்ள நமக்கு சவால் விடுக்கிறது என்றார்.

 

திருஅவையின் மாண்பைப் பற்றிய செழுமையான புரிதலில், விவிலியப் போதனைகளின் வழியாகவும் பாரம்பரியத்தின் வழியாகவும் பல நிலைகளில் ஏற்படுத்திடும் தாக்கத்தை இக்கோட்பாட்டு ஆவணம் விரிவாகப் பிரதிபலிக்கிறது என்று கூறிய கர்தினால், செல்வந்தர்களுக்கும் அடிப்படை வசதி இல்லாதவர்களுக்குமிடையே அதிகரித்துவரும் இடைவெளி, வாழ்வாதாரத்திற்காக புலம் பெயர்பவர்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டோர் மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களைக் குறித்து உரையாட நமக்கும், குறிப்பாக திரு அவைக்கும் மிகப்பெரிய சவாலை முன்வைப்பதாக எடுத்துரைத்தார்.

 

  • உக்ரைனில் போர் தொடங்கி  780 நாள்களுக்குப் பின்னரும், பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 57 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர் என்றும் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

 

ஏப்ரல் 13 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி, 2022 ஆம் ஆண்டு உக்ரைன் இரஷ்யா போர் தீவிரமடைந்த காலத்தில் இருந்து, ஏறக்குறைய 1,957 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன, அழிக்கப்பட்டுள்ளன என்றும் கவலை தெரிவித்துள்ளது.அண்மைய வாரங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் ஏற்பட்ட தாக்குதல்களினால் நீர், நலவாழ்வு, கல்வி, மின்சாரம் மற்றும் பிறசேவைகள் பெறுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன என்றும், குழந்தைகள் கொல்லப்படுதல் மற்றும் காயமடைதல் அவர்களின் குடும்பத்தினர், நண்பர் மற்றும் சமூகத்திற்குப் பெரும் வேதனையை ஏற்படுத்துகின்றது என்றும்  அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எல்லா நேரங்களிலும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும், நிம்மதியாக வாழவும், குழந்தைப் பருவத்தை மீண்டும் அனுபவிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது அவ்வறிக்கை.