சிதைந்த முகம்! உடைந்த மனம்! | Bro.Rex SdC | VeritasTamil

கருவாக இருந்தேன் பெண்ணாகப் பிறந்தேன்

நன்றாக வளர்ந்தேன்

பள்ளியில் படித்தேன் இடையில், பருவ வயது அடைந்தேன்.

சுவாரசியமான படிப்பு.

சுகமான வாழ்வு பதினெட்டு வயது வரை மட்டுமே.

கல்லூரி சென்றேன் சிரித்த முகத்தோடு

வீடு திரும்பினேன் களைத்த உடலோடு

என்ன செய்வது வீட்டின் சூழ்நிலையால்

வீடு வந்த உடனே வேலைக்கு சென்றேன்.

மனவலியோ உடல்வலியோ

எல்லா வலிகளையும்

பொறுத்துக்கொண்டு வீட்டின் சுமைகளை

மனதில் சுமந்து கொண்டு

வேலைகளை எல்லாம்

என் தலையில் சுமந்தேன்.

தினமும் வேலைக்கு நடந்து சென்றேன்

நேர்கொண்ட பார்வையோடு தினமும் எனை

பின்தொடர்ந்து வந்தான் ஒருவன்

காதல் என்ற பெயரோடு

காவியமும் நீயே ஓவியமும் நீயே

திங்களும் நீயே வெள்ளியும் நீயே

என் உசுரு உனக்காக என் உலகம் உனக்காக.

நீ ம்ம்னு மட்டும் சொல்லு உன்ன சொர்கத்து ராணியா பாத்துப்பேன்.

மூச்சு இல்லாமல் கூட வாழ்வேன் ஆன நீ இல்லாம வாழமாட்டேன் என

ஆடிப்பெருக்கு வெள்ளம் போல

ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான்.

அண்டார்டிகா பனியை போல

உருகி உருகி  உலாவினான்.

 

நான் வீட்டுச்சுமைகளை மனதில் சுமந்ததால்

என் கண்களுக்கு

ஆசையும் தெரியவில்லை அண்டார்டிகா பனியும் தெரியவில்லை

தெரியாத காதலையும் புரியாத கவிதைகளையும்

ஏற்கச் சொல்லி என்னை வற்புறுத்தினான். வற்புறுத்திய காதலை ஏற்காமல்

தயவு செய்து எனை விட்டுவிடு

என்று மனசு உடைஞ்சி கதறினேன்

என் கதறல் அவனுக்கு கேட்காமல்

காதல் என்ற மூன்று எழுத்துகளோடு

என்னை மனம் குழம்ப செய்தான்.

நான் வேண்டாம் வேண்டாம் என்று

காதலை ஒதுக்க

பிடிக்காத காதலை புரிந்து

கொள்ளாத அவன்

ஒதுக்கு புறமாக இருந்து

என்மேல் ஆசிடை அள்ளி வீச

என் முகம் எரிச்சலோடு

எரிய என் உடல், தீ இல்லாமல் கருக

சிதைந்த முகத்தோடு

கருகிய உடலோடு

வலியை என்னுள்

புதைத்துக்கொண்டு

கண்ணீரோடு

மறுவாழ்வு வாழ ஆசை கொண்டேன்.

ஆனால் மறுபடியும் அதே

மூன்று வார்த்தைகளோடு வந்து

என்னை கலியாணம் கட்டச் சொன்னான்.

நான் அவன் காலில் விழுந்து

என்னை விட்டுவிடு என

கதறி கதறி அழுவ

அவன் மறைத்து வைத்திருந்த கத்தியால்

என் கழுத்தை அறுக்க

என் உயிர் என்னைவிட்டு பிரிய

இரத்தம் என்னை முழுவதுமாய் நனைக்க

பார்வையிழந்த விதவைத் தாயையும்

ஐந்து தங்கைகளின் வாழ்வையும்

நினைத்து கொண்டு

கண்ணயர கண்களை மூடினேன்

சொல்ல முடியா வலியோடு..

- அருள்சகோ. ரெக்ஸ் மில்டன்  SdC

 

இந்த பதிவு 'குவனெல்லிய சபை' நடத்தும் 'அன்பின் சுவடுகள்' என்ற மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது.