நன்மைக்கான நிறுத்தங்கள்.. | JuditLucas | VeritasTamil

நமது வாழ்க்கையில் நாம் பல நேரங்களில் பலவிதமான நிகழ்வுகள், செயல்பாடுகள், பயணங்கள் போன்றவற்றிலிருந்து நிறுத்தப்படுகிறோம்.

உதாரணமாக பத்தாம், பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இருந்தால் இந்த வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டிகள் நீக்கப்படும். அவர்களின் தொலைபேசிகள் பறிக்கப்படும். 

ஒரு சில நேரங்களில் அலுவலகங்களுக்கோ பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்லும்போது ஒரு பேருந்தை விட்டுவிடுவோம். அந்நேரத்தில் அதற்காக மிகவும் வருத்தப்படுவோம். 

ஆனால் உண்மையாதெனில், தேர்வுகள் முடிந்தவுடன் தொலைக்காட்சியும் தொலைபேசியும் திரும்பக்கொடுக்கப்படும். விடப்பட்ட பேருந்து பழுதாகி பாதி வழியில் நின்றிருக்கும். அதில் சென்றிருந்தால் தாமதமாக நாம் பணிக்கு செல்ல வேண்டியதாகியிருக்கும்.

விவிலியத்தில் மோசே செங்கடலை பிளந்த நிகழ்வு நாம் அனைவரும் அறிந்ததே. "கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள்." (விடுதலை பயணம் 14:16). இங்கு ஆண்டவர் சொன்னவாரே மோசே தம் கையைக் கடல் மேல் நீட்டவே ஆண்டவர் கடலை பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கி இரண்டு புறங்களிலும் நீர்த்திரள் இஸ்ரயேல் மக்களுக்கு சுவராக நின்றது. 

இதில் நாம் உணர்ந்துகொள்ளவேண்டியது யாதெனில் ஆண்டவர் அந்த கடல் நீரை மறைந்து போகச் செய்யவில்லை. மாறாக நிறுத்தி வைத்திருந்தார். இஸ்ரயேல் மக்கள் கடந்து செல்லும் வேளையில் அவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதை அறிந்தே அந்த நீரை இரண்டு புறமும் நிறுத்தி வைத்திருந்தார். 

இஸ்ரயேல் மக்களை நோக்கி எகிப்தியர் வந்தபோது ஆண்டவரின் கட்டளைப்படி மோசே மீண்டும் தம் கையை கடல்மேல் நீட்டவே கடல் மீண்டும் தன் முந்தைய  நிலைக்கு திரும்பியது. இஸ்ரயேல் மக்களை துரத்திகொண்டுவந்த பார்வோனின் படையில் ஒருவர் கூட தப்பவில்லை. 

இதேபோல் நமது வாழ்வில் நிறுத்திவைக்கப்பட்ட தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், பயணங்கள், உறவுகள், காதல் போன்ற பல விஷயங்கள் நமக்கான 'நன்மைக்கான நிறுத்தங்களே'.

கடந்தவை அனைத்தும் நன்மைக்கே
காத்திருப்பவை அனைத்தும் நமக்கே
கடவுள் நமக்கென படைத்தது நமக்கென காத்திருக்கும் 
வாழ்க்கையிலும் சரி! உறவுகளிலும் சரி!
நமக்கானவை நமக்கானதே!

- ஜூடிட் லூக்காஸ்